இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் அரசினரால், ஒரு வேளை தவறுதலாக, சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் அந்த விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை என்று இரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

_110456937_eb605c1c-ba6b-4c48-a40c-3ac692daeca5மேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன?

தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.

அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘தோர் எம்-1’ ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.

நிலத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை மூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக தமக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்கும் நோக்கம் இரானுக்கு இல்லாமலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 63 பேர் கனடிய குடிமக்கள். கனடிய குடிமக்கள் மட்டுமல்லாது டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற அந்த விமானத்தில் இருந்து, வேறு இணைப்பு விமானம் மூலம் கனடா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் பலரும் இறந்தவர்களில் அடக்கம்.

 
கருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் தர முடியாது என்று இரான் கூறியுள்ளது

விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பும் சந்தேகம் தெரிவித்துள்ளார். எனினும் பென்டகன் அதிகாரபூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

இரான் கூறுவது என்ன?

விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்கா அல்லது விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனத்துக்கு தர முடியாது என்று கூறியுள்ளது இரான் அரசு. எனினும் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பான விசாரணையில் போயிங் பங்கேற்கலாம் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பி மேற்கு நோக்கிச் சென்ற அந்த விமானம், கிளம்பிய சற்று நேரத்தில் வலப்பக்கம் திரும்பி மீண்டும் விமான நிலையம் வர முற்பட்டதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி ஆபேத்சாடே கூறியுள்ளார்.

விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் அதில் தீ பற்றியிருந்ததை சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரும்பும் முன்னர் அலி காமேனி விமான நிலையத்துக்கு அபாய உதவிகள் கோரி விமானி எந்த அழைப்பையும் விடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
ரஷ்யாவின் ‘தோர்’ ஏவுகணைகள் இரானிடம் உள்ளதாக அறியப்படுகிறது

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறுவது அறிவியல்பூர்வ தர்க்கமற்றது என்றும் அவர் மறுத்துள்ளார்.

‘இரானுக்கு சங்கடமான சூழல்’

இரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளே தவறுதலாக விமானத்தை வீழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சற்று முன்புதான் கிளம்பிய அந்த விமானத்தை பயணிகள் விமானம் என்று எளிதில் அடையாளம் கண்டிருக்க முடியும் என்று பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்கஸ் கூறுகிறார்.

ஒருவேளை இரான் தரப்பில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டிருந்தால், சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட ரஷ்யாவின் ‘தோர்’ ஏவுகணையை ஏவியவர்கள் எதைப்பார்த்து தாக்கும் முடிவுக்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை என்கிறார் ஜொனாதன் மார்கஸ்.

ஒருவேளை இரான் இந்த விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியிருந்தால் இது அந்நாட்டுக்கு சங்கடமான சூழலை உருவாக்குவதுடன், அந்தப் பிராந்தியத்தின் அரசியலையும் மோசமாக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version