இரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டபோது நடந்த விஷயங்களை தன் கட்சிக்காரர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார்.
அவர் இரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். அவர் அமெரிக்க வீரர்களையும் இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் தாக்கியதாகக் கூறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்திருந்தது.
சுலைமானி கொல்லப்பட்டதால் இரான் – அமெரிக்கா இடையே போர் உருவாகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
சுலைமானி கொலைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது இரண்டு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது இரான்.
இந்தத் தாக்குதலின் போது எதிர்பாராதவிதமாக உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாகி பல நாடுகளும் இரானின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தன.
அதன் பிறகுதான் இரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்டபோது நடந்த சில விஷயங்கள் பற்றி தன் கட்சியினரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தன் மார் – அ- லாகோ இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுக் கட்சியின் நன்கொடையாளர்களுக்கு இரவு விருந்து வழங்கினார் ட்ரம்ப்.
அப்போது குடியரசுக் கட்சியினரும், பிற விமர்சகர்களும் ட்ரம்ப்பின் பதவி நீக்கத் தீர்மானம் செனட் சபைக்கு வரவுள்ள நிலையில் எதற்காக இரான் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அதற்கு அதிபர் அளித்த பதிலை சி.என்.என் ஊடகம் ஆடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள ட்ரம்ப், “சுலைமானி நம் நாட்டைப் பற்றித் தவறான கருத்துகளைக் கூறிவந்தார்.
இரான், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் நம் மக்களைக் கொல்லவுள்ளதாகவும் கூறினார்.
இன்னும் எத்தனை நாள்களுக்கு அவரது மோசமான பேச்சுகளை நாம் கேட்க முடியும். சுலைமானியால் நம் நாட்டுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் மீது குறிவைக்கப்பட்டது.
சுலைமானி கொல்லப்பட்ட தினம் இராக்கில் நடந்த முன்னேற்பாடுகள், தாக்குதல் போன்ற அனைத்து விஷயங்களையும் நம் அதிகாரிகள் எனக்கு நேரலையாகத் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தனர்.
அவர்கள் இறப்பதற்கு இன்னும் 2 நிமிடம் 11 விநாடிகள் மட்டுமே உள்ளன. அனைத்தும் சரியாகச் சென்றுகொண்டிருக்கிறது.
சார் அவர்கள் அனைவரும் காரில் ஏறிவிட்டனர், கார் குண்டு துளைக்காத அமைப்புடையது. சரியாக அவர்கள் இறப்பதற்கு இன்னும் 30 விநாடிகள் மட்டுமே உள்ளன சார்.
10, 9,8 திடீரென பெரும் சத்தம். சார் திட்டம் முடிந்துவிட்டது” இப்படிதான் எனக்குக் கூறினார்கள். சுலைமானி கடுமையாகக் கொல்லப்பட்டதற்குத் தகுதியானவர்தான்.
ஏனெனில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்ததற்கு அவரே காரணம். சுலைமானி இறந்த பிறகும் அவரால் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர்” என ட்ரம்ப் பேசியுள்ளார்.