சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.
இதனிடையே இந்த நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் இருவருக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று தேசிய மருத்துவக் கமிஷன் தெரிவித்துள்ளது.
நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தபோது அவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டது என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
11 மில்லியன் மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனக் கணக்குப்படி தற்போது 218 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகள் வுகான் மாகாணத்தில் இருந்து வரும் விமானப் பயணிகளை சோதனை செய்தே அனுமதிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூ யார்க் ஆகிய விமான நிலையங்களில் கடந்த வாரமே இத்தகைய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன.
ஆஸ்திரேலியாவில் வுகான் சென்று திரும்பிய ஒரு நபர் தனிமையில் வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியா செல்கிற சுற்றுலாப் பயணிகளில் சீனர்களின் எண்ணிக்கை மிக முக்கியமானது. கடந்த ஆண்டு சீனாவில் இருந்து 10 லட்சம் பேர் ஆஸ்திரேலியா சென்று வந்தனர்.