வரலாற்றின் பக்கங்களில் பயங்கர நினைவுகளை எழுதிச் சென்ற படுகொலை முகாம்தான் ஔஷ்விட்ஸ் படுகொலை முகாம் .

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, ஹிட்லர் தலைமையிலான நாஜி படை இங்கேதான் 11 லட்சம் பேரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்தது. அவர்களில் 90 சதவீதம் பேர் யூதர்கள்.

ஔஷ்விட்ஸ் படுகொலை முகாம் என்று அறியப்படும் இந்த முகாம் 75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ரஷ்யப் படையினரால் நாஜிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

அதனால்தான் இந்த நாள் உலக ஹாலோகாஸ்ட் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அப்போது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்தில் 1940ம் ஆண்டு இந்த முகாம் கட்டப்பட்டது.

தொடக்கத்தில் போலந்து தலைவர்களையும், கிளர்ச்சியாளர்களையும் சிறைவைக்க பயன்படுத்தப்பட்டது.

1942 முதல் யூதர்களை கொன்றழிக்கும் நாஜி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனது இந்த முகாம். சோவியத் போர்க்கைதிகள் உள்ளிட்ட பல குழுவினரும் இங்கு கொல்லப்பட்டனர்.

இங்கே சிறைவைக்கப்பட்டவர்கள் திட்டமிட்ட முறையில் கொடுமைகளுக்கு ஆளாயினர். சிறைவாசிகளுக்கு சூடுவைத்து அடையாள முத்திரைகள் குத்துவார்கள், பச்சை குத்துவார்கள்.

கொல்லப்படுவதற்காக இங்கே அனுப்பப்பட்ட யூதர்களை வகை வகையாகப் பிரித்தெடுப்பார்கள். மிக சிறிய வயதினர், மிகுந்த வயோதிகர்கள், மிகுந்த நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் விஷவாயு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

விஷவாயு முகாமுக்கு அனுப்பப்படாதவர்கள் அடிமைகளாக வேலை செய்யவேண்டும். சிறைவாசிகளை பட்டினி போடுவார்கள், கொடுமைப்படுத்துவார்கள். அவர்களை வைத்து பல பரிசோதனைகள் நடக்கும். தப்பிச் செல்ல முயன்றவர்கள், எதிர்ப்பு காட்டுகிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

1940ல் இந்த முகாம் கட்டப்பட்டதில் இருந்து 1945 ஜனவரி 27-ம் தேதி சோவியத் படைகளால் விடுவிக்கப்பட்டதுவரை இந்த முகாம் செயல்பட்டது.

ஹிட்லர் தலைமையிலான நாஜிக்களும், அவர்களின் கூட்டாளிகளும் நிகழ்த்திய ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது செயல்பட்ட பல படுகொலை முகாம்களில் ஒன்றுதான் இந்த ஔஷ்விட்ஸ் முகாம்.

ஔஷ்விட்ஸ் முகாம் விடுவிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் இந்த நாள் சர்வதேச ஹாலோகாஸ்ட் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version