இலங்கையில் கடந்த 9 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்றைய (மார்ச் 20) தினம் புதிதாக 13 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 218 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் எந்தவொரு உயிரிழப்புக்களும் பதிவாகாத பின்னணியில், வெளிநாட்டு பிரஜையொருவர் மாத்திரம் குணமடைந்து நாட்டை விட்டு சென்றுள்ளார்.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து நோயாளர்களும் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முடங்கியது இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“பயங்கரவாதம் இலங்கையில் இருந்த சந்தர்ப்பத்தில் கூட நாட்டையே முடக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. சிலரின் கவனயீனம் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டது” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் விசேட உரையொன்றில் தெரிவித்திருந்தார்
குறித்த காலப் பகுதியில் எந்தவொரு நபரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காலப் பகுதியில் ஊடக சேவை மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர் மாத்திரம் வெளியில் செல்ல அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் உத்தரவை மீறி வெளியில் நடமாடுவோரை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மாவட்டம், கொச்சிகடை, ஜாஎல மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு ஏற்கனவே போலீஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த காலப் பகுதியில் அரசாங்கத்தின் உத்தரவை மீறி புத்தளத்திலிருந்து கடல் மார்க்கமாக மன்னார் செல்ல முயற்சித்த 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சைக்கிள் ஓட்டப் போட்டி நடத்திய அரசியல்வாதி கைது
கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை மீறி சைக்கிள் ஓட்டப் போட்டி நடத்திய தம்புள்ளை நகர மேயர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தம்புள்ளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, அவர்களை 20 லட்சம் ரூபாய் வீதமான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராகமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை சுய மருத்துவ கண்காணிப்பிற்கு ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் போலி விடயங்களை கூறி, மருத்துவமனையின் சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார்.
அத்துடன், குறித்த நோயாளர் தங்கியிருந்த அறையில் இருந்த ஏனைய நோயாளர்களையும் சுய மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போலி தகவல்களை முன்வைத்து ராகமை மருத்துவமனையில் அனுமதியான கொரோனா நோயாளருக்கு எதிராக வழக்கு தொடர எதிர்பார்த்துள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
குறித்த நபர் இத்தாலியிலிருந்து வருகைத் தந்தவர்களுடன் விருந்துபசாரமொன்றில் கலந்துக்கொண்ட விடயத்தை மறைத்தே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.