தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அண்ணனை பழிதீர்க்க, அவரின் இரண்டு குழந்தைகளை தம்பி கொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதான அந்தோணி. இவருக்கு 40 வயதில் ஜோதிமுத்து, மற்றும் 35 வயதில் ரத்தினராஜ் என இரு மகன்கள். இருவரும் லாரி ஓட்டுநர்களாக உள்ளனர்.

ஜோதிமுத்துவிற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு உஷாராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 14 வயதில் மைக்கேல் என்ற மகனும், 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர்.

மேலும் தனது மனைவியின் தங்கையான மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் ஜோதிமுத்து. இரண்டாவது மனைவிக்கு 9 வயதில் எட்வின் ஜோசப் என்ற மகன் இருந்தார். குழந்தைகள் படிப்பிற்காக இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் விளாத்திகுளம் காமராஜர் நகருக்கு ஜோதிமுத்து இடம்பெயர்ந்தார்.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதால், மூன்று குழந்தைகளையும், சொந்த ஊரான அயன் பொம்மையாபுரம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜோதிமுத்து.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்ற ஜோதி முத்துவின் இரண்டு மகன்கள் வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அக்கம்பக்கம் தேடியும் சிறுவர்களைக் காணாததால் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஜோதிமுத்து புகார் அளித்துள்ளார்போலீஸ் விசாரணையில் ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கடைசியாக அழைத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் ரத்தினராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் இருந்ததால் முன்னுக்குப் பின் முரணாக தகவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கிராமத்தின் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் சிறுவர்களின் செருப்பு ஒன்று கிடப்பதாக கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீயணைப்பு துறையினர் துணையுடன் கிணற்றில் தேடியபோது சிறுவன் எட்வின் ஜோசப் உடலை சடலமாக மீட்டனர். மேலும், திங்கள் அதிகாலை மற்றொரு சிறுவன் மைக்கேல் உடலையும் சடலமாக போலீசார் மீட்டனர்.

சிறுவர்களின் இரு உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை தொடர்ந்தனர். ரத்தினராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தததை ஒப்புகொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ரத்தினராஜ், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது அண்ணன் மனைவியின் சகோதரி மகாலட்சுமியை காதலித்து வந்துள்ளார்.

2017-09-21ரத்தினராஜ் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்ததால் மகாலட்சுமியை ரத்தினராஜிக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெற்றோர் மகாலட்சுமியின் அக்கா கணவர் ஜோதிமுத்துவிற்கே இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

பின்னர் ரத்தினராஜ்க்கு ராஜேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால், குடிக்கு அடிமையான ரத்தினராஜை பிரிந்து அவரது மனைவி சென்றுவிட்டார். தனது காதலியை, தனது அண்ணன் திருமணம் செய்து கொண்டதால்தான் தனது வாழ்க்கை சீரழிந்ததாகக் கூறி வந்துள்ளார்.

மேலும், ரத்தினராஜ் அடிக்கடி தனது அண்ணன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல ரத்தினராஜ், ஜோதிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தன் காதலை கெடுத்து, காதலியை திருமணம் செய்து கொண்டு விட்டாய் உன் குடும்பத்தை அழிக்கமால் விடமாட்டேன் என்று கூறிவிட்டு ரத்தினராஜ் சென்றுள்ளார். ஞாயிற்றுகிழமை மது போதையில் இருந்த ரத்தினராஜ் அண்ணன் குடும்பத்தை பழிதீர்க்க முடிவு செய்துள்ளார்.

அப்போது ஊர் கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்த அண்ணனின் மகன்களை அழைத்து அவர்களுடன் விளையாடுவது போன்று விளையாடி திடீரென இரண்டு சிறுவர்களையும் கிணற்றில் தள்ளியுள்ளார்.

பின்னர் இருவரும் தண்ணீரில் முழ்கி துடிதுடித்து இறக்கும் வரை பார்த்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் வீட்டிற்குச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரத்தினராஜை கைது செய்த போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நீதுமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியையும் வீட்டைவிட்டு தூரத்திவிட்டு, 15 வருடங்களுக்கு முன்பு காதலித்த பெண்ணை திருமணம் செய்த அண்ணனை பழி தீர்க்க அவரின் இரண்டு குழந்தைகளை சித்தப்பாவே கொடூரமாக கொலை செய்த சம்பவம் விளாத்திக்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version