உதைபந்தாட்டத்தின் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொது ஆட்களில் அனேகருக்கும் மிகப் பரீட்சயமானவர் ரொனால்டினோ.
பிரேஸிலைச் சேர்ந்த ரொனல்டினோ உலகின் மிகப் பிரபலமான கழகங்களான பார்சிலோனா, ஏசி மிலன், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் ஆகிய கழகங்களுக்காக ஆடியவர்.
தனது நெழிவு சுழிவான ஆட்டத்துக்காகவும் சிகை அலங்காரத்துக்காகவும் மிக முக்கியமாய் என்ன நேர்ந்தாலும் புன்னகைக்கிற சுபாவத்துக்கவும் அனைவராலும் நேசிக்கப்படுகிறவர். நான் அறிய வெறுப்பாளர்கள் இல்லாத மிகச்சொற்பமான உதைபந்தாட்ட வீரர்களுள் முக்கியமானவர்.
உலகக் கிண்ணம் , FIFA Ballon’ dor உட்பட உதைபந்தாட்டத்தின் உயரிய விருதுகளில் ஒன்றுவிடாமல் வென்றவரும், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் அதிக சம்பளம் பெறுகிற விளையாட்டுவீரர்களில் முதன்மையானவராக இருந்தவரும் , மரடோனா, பீலே , பெக்காம் , ரொனால்டோ வரிசையில் உதைபந்தாட்ட icon ஆக இருந்தவருமான ரொனால்டினோ கடவுச்சீட்டு மோசடி வழக்கில் தற்சமயம் பராகுவே சிறையில் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பராகுவேக்குள் நுழைந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ரொனால்டினோவும் (39) அவரது சகோதரரும் கடந்தவாரம் பராகுவேயில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளனர்.
உலக உதைபந்தாட்டத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய ஒரு நபர் போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தவேண்டிய நோக்கம் ?
அரச அனுமதி இன்றி தனது ஏரிக்கரை வீட்டின் பின்பக்கமாய் உள்ள ஏரியில் படகைக் கட்டிவைப்பதற்கான படகுநிறுத்துமிடத்தை (pier) அமைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2.6 மில்லியன் பவுண்டுகளும் , இதர தண்டப்பணமாக 1.7 மில்லியன் பவுண்டுகளையும் அபராதமாக பிரேஸில் அரசு ரொனால்டினோவுக்கு விதித்தது.
ஆனால் இன்றுவரை அந்த தொகை முழுவதும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ரொனால்டினோவுக்கு சொந்தமான 57 சொத்துக்களை பிரேசில் அரசு முடக்கியது.
இருந்தபோதும் சொச்சமாய் உள்ள தண்டப்பணம் குறித்து அலட்டிக்கொள்ளாத ரொனால்டினோ , உலக சுற்றுலாக்களை மேற்கொண்டது பிரேஸில் அரசை இன்னமும் கடுப்பாக்கியது.
இதன் விளைவாக 2015 இல் ரொனால்டினோவின் கடவுச்சீட்டை முடக்கியது பிரேசில். இதன் பிறகு ரொனால்டினோவுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக எந்தச் செய்திகளும் இல்லை.
இந்த நிலையில் தான் தன்னை யாரும் அடையாளம் காணமாட்டார்கள் என்ற நினைப்பில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பராகுவேக்குள் நுழைந்திருக்கிறது இந்த மொக்கு சாம்பிராணி.
சரி அதைவிடுவோம். சாதாரண ஒரு நபருக்கு என்றால் 4 மில்லியன் பவுண்டுகள் என்பது பெரிய தொகையாக இருக்கலாம். ஆனால் சம்பளமாகவும், விருதுகளாகவும், விளம்பரங்கள் மற்றும் அனுசரணையாளர்கள் மூலமாகவும் மில்லியன்கள் கணக்கில் சம்பாதித்த உதைபந்தாட்ட ஜாம்பவான் ஒருவருக்கு அந்த தொகையை எப்படி கட்ட முடியாமல் போயிருக்கும் ?
உண்மையைச் சொல்லப்போனால் , Ronaldhino is BROKE. வாழ்ந்து கெட்ட ஜமீன் கணக்காய் , ஏதுமற்று வங்குரோத்தாகிவிட்டார் ரொனால்டினோ.
காரணம் ?
2003 இல் பார்சிலோனா ரொனால்டினோவை வாங்கும் பொழுது ரொனால்டினோவுக்கு வயது 23. பார்சிலோனா வரலாற்றில் எட்டப்பட்ட மகத்தான சாதனைகள் பலவும் ரொனால்டினோ பார்சிலோனாவில் விளையாடிய காலத்தில் நிகழ்த்தப்பட்டன.
லா லீகா, சம்பியன்ஸ் லீக் , club world cup , copa del ray , super copa , Ballon dor , என்று அத்தனை கோப்பைகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்தார் ரொனால்டினோ.
ரொனால்டினோ ஆடிய பார்சினோனா உலகின் தலை சிறந்த கழகம் என்று புகழாரம் சூட்டப்பட்டது. காரணம் ரொனால்டினோ. இப்போது லியனல் மெஸ்ஸியை எப்படி பார்சிலோனா ரகிரகளும் உலக உதைபந்தாட்ட ரசிகர்களும் கொண்டாடுகிறார்களோ அப்படி அன்றைய நாட்களில் ஆராதிக்கப்பட்டவர் ரொனால்டினோ.
ஆனால் இருபத்தி எட்டே வயதான ரொனால்டினோவை அதுவும் அன்றைய தேதியில் உலகின் ஒப்பற்ற வீரராக இருந்த ஒருவரை ஏசி மிலன் கழகத்திற்கு பார்சிலோனா விற்றது உலக உதைபந்தாட்ட அரங்கில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது லியனல் மெஸ்ஸியை பார்சிலோனா விற்றால் எப்படியிருக்கும் ?
அதுவும் வெறும் இருபத்தி எட்டே வயதில். உதைபந்தாட்டத்தை பொறுத்தவரையில் ஒரு வீரரின் peak time எனப்படுவதே 27- 32 வயது தான்.
அப்படியிருக்க , ஒரு அதி அற்புதமான வீரரை இருபத்தி எட்டே வயதில் பார்சிலோனா விற்க காரணம் என்ன ?
ரொனால்டினோவின் இரவு வாழ்க்கை, பொதுவாகவே பிரேஸில் வீரர்கள் மது மற்றும் கேளிக்கைப் பிரியர்கள். குடித்துக் கொண்டாடுவதிலும் , இரவு விடுதிகளில் கிடையாய் கிடந்து நாசமறுந்து போவதற்கும் பெயர் போனவர்கள்.
அடுத்த பீலே என்று புகழாரம் சூட்டப்பட்டவரும், இருபத்தி ஒரு வயதில் ரியல் மட்ரிட் அணிக்காக ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டவருமான ரொபினியோவும், ரொனால்டோவின் பிரதி என்று சிலாகிக்கப்பட்டவரும் தனது இருபத்தி இரண்டு வயது வரை இத்தாலிய கழகமான இண்டர் மிலானின் இளம் நட்சத்திரமாகவும் இருந்த அண்ட்றியானோவும் கெட்டு குட்டிச்சுவராய் போனதற்கு காரணம் குடியும் கூத்தும்.
பார்சினோலாவில் ஆடிக்கொண்டிருந்தபோது தேக ஆரோக்கியத்துடனும் நல்ல பிள்ளையாகவும் ஆடிக்கொண்டிருந்த நெய்மார் , பாரீஸ் செயிண்ட் ஜேர்மனில் அடிக்கடி உடல் உபாதைக்கு உள்ளாகவும் காரணம் கட்டுப்பாடற்ற இரவு வாழ்க்கை. நெய்மார் பார்சிலோனாவுக்காக ஆடிய போது விசேட அதிகாரிகள் மூலம் நெய்மார் கண்காணிக்கப்பட்டார்.
நெய்மார் தன் பிரேஸில் டீ,என்,ஏவில் உள்ளது போல ஒரு பார்ட்டி எனிமல் (party Animal )ஆகிவிடாமல் தடுக்க பார்சிலோனா சகல ஏற்பாடுகளையும் செய்தது.
ஆனால் பாரிஸில் நெய்மார் கேள்வி கேட்பார் இல்லாத காளை. ரொனால்டினோ மட்டிலும் இதை பார்சிலோனா இதைச் செய்தது.
ஆனால் சிறிது காலத்தில் ரொனால்டினோ ஒரு சூப்பர் ஸ்டாராக ஆனதன் பிற்பாடு ஒரு கட்டத்திற்கு மேல் பார்சினோனாவால் ரொனால்டினோவை கட்டுப்படுத்த் முடியாத நிலை இருந்தது.
ஆனாலும் தன் சக்திக்கு உட்பட்ட அத்தனை முறையிலும் பார்சிலோனா ரொனால்டினோவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
ரொனால்டினோவுக்கு இருபத்தைத்து இருபத்தாறு வயதாகிற போது சிறுவன் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்குள் வருகிறான். வந்த சொற்ப நாட்களுக்குள் ரொனால்டினோவின் நண்பனாகவும் மாணவனாகவும் ஆகிப் போகிறான்.
” He is more than a team mate. He is my teacher and mentor ” என்று மெஸ்ஸி குறிப்பட்டதை இவ்விடத்தில் சொல்ல வேண்டும். நாட்கள் நகர நகர லியனல் மெஸ்ஸி என்னும் உதைபந்தாட்ட ராட்சசனை கண்டுகொள்கிறது பார்சிலோனா.
அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு உதைபந்தாட்ட உலகை தாங்கள் ஆளுவதற்குரிய ஆளை பார்சிலோனா கண்டுபிடிக்கிறது. மெஸ்ஸியும் – ரொனால்டினோவும் என்று நினைக்கவே பார்சிலோனா ரசிகர்களுக்கும் , நிர்வாகத்துக்கும் தலைகால் புரியாத சந்தோசம் தலையில் ஏறி போதையேற்றுகிறது.
இந்த நிலையில் இருபத்தி ஏழு மற்றும் எட்டாவது வயதில் ரொனால்டினோவின் மது மற்றும் இரவு விடுதிப் பழக்கம் எல்லை மீறிப் போகிறது.
காலை பயிற்சிகளின் போது தெளியாத போதையுடன் வரத்தொடங்கினார் ரொனால்டினோ. இரவிரவாய் குடித்துக்கொண்டாடிவிட்டு அடிக்கடி பயிற்சிகளுக்கு விடுப்பு எடுக்க ஆரம்பிக்கிறார்.
ரொனால்டினோ பயிற்சிக்கு வரவில்லை அல்லது போதையில் வருகிறார் என்பதை விட இந்த பழக்கங்களில் இருந்து ரொனால்டினோவின் மாணவனான மெஸ்ஸியை ” பாதுகாக்க ” வேண்டிய கட்டாயம் இருப்பதை பார்சிலோனா உணருகிறது.
இன்றைக்கும் பார்சிலோனா ரசிகர்கள் மட்டிலும் , நிர்வாகம் மட்டிலும் ரொனால்டினோ ஒரு மரியாதைக்குரிய லெஜண்ட். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு காலத்தின் தேவை என்ற புரிதல் இரண்டு தரப்புக்கும் இருக்கிறது.
பார்சிலோனாவில் இருந்து இத்தாலியின் ஏசி மிலனுக்கு போகிறார் ரொனால்டினோ. உதைபாந்த ஐகான். லெஜண்ட். அன்றைய தேதியின் உச்ச நட்சத்திரம்.
இவை அத்தனையும் சேர்ந்து ஏசி மிலனின் கைகளை கட்டிப்போட , கட்டுக்கடங்காத சுதந்திரத்தை அனுபவித்தார் ரொனால்டினோ. குடி , பார்ட்டி, போதை, இரவு விடுதிகள், bunk the practice , Repeat …..
விளைவு , பார்சிலோனாவை விட்டு நீங்கியதில் இருந்து ரொனால்டினோவால் தனது பழைய சிறப்பான ஆட்டத்துக்கு எப்போதும் வர முடியவில்லை.
Peak years என்று சொல்லப்படக்கூடிய 28,29,30 ஆவது வயதுகளில் 76 போட்டிகளை இண்டர் மிலனுக்காக ஆடிய ரொனால்டினோவால் வெறும் இருபது கோல்களை மட்டுமே போட முடிந்தது. ஆட்டத்திலும் பழைய சுறுசுறுப்போ , நெழிவு சுழிவுகளோ வேகமோ இல்லை.
சராசரி வீரர்கள் கூட தமது 30-35 வது வயது வரை ஐரோப்பாவின் முன்னணி கழகங்களுக்கு ஆடிகொண்டிருக்கிற நிலையில் , உலகின் மிகச்சிறந்த வீரர் என்று அறியப்பட்ட்ட ஒருவரை , அவரது முப்பதாவது வயதில் பிரேசில் கழகமான ஃபிளமிங்கோவிற்கு விற்கிறது ஏசி மிலன்.
உலக உதைபந்தாட்டத்தைப் பொறுத்தவரை நீங்கள் உலகின் எப்பகுதியிலும் இருந்து ஐரோப்பிய கழகம் ஒன்றிற்கு ( குறிப்பாய் ஸ்பெயின் , இங்கிலாந்து , ஜேர்மனி, இத்தாலி ) விற்கப்படுகிறீர்கள் என்றால் அது உங்களது ஏறுமுகம். இதுவே ஐரோப்பிய கண்டத்தில் ஆடிவிட்டு ,பிறகு ஐரோப்பாவிற்கு வெளியே விற்கப்படுகிறீர்கள் என்றால் அது இறங்குமுகம்.
உதைபந்தாட்ட வீரர்கள் தங்கள் வாழ்வின் அற்புதமான form இல் இருக்கக்கூடிய வயதான 30 இல் ரொனால்டினோ என்ற சகாப்தத்தின் இறங்குமுகம் ஆரம்பித்துவிடுகிறது.
ரொனால்டினோவின் சமவயதை ஒத்த வீரர்கள் தங்களது 30+ வயதுகளில் ஐரோப்பாவின் முன்னணி கழகங்களில் ஆடிக்கொண்டிருக்க ரொனால்டினோ பிரேசில் மைதானங்களில் தனது சொந்த மக்கள் முன்னிலையில் விளையாடிக்கொண்டிருந்தார்.
எது எப்படி ஆனாலும் மது , போதை மற்றும் களியாட்டங்கள் மீதிருந்த ரொனால்டினோவின் காதல் குறைந்தபாடில்லை. உலகெங்கும் அலைந்து அலைந்து களியாட்டம் போட்டார்.
குடியிலும், போதையிலும் இரவு விடுதிகளில் கிடந்தார். உடல் தனது தகுதியை இழந்தது. முப்பத்தி ஐந்து வயதுக்குள்ளாகவே ஐம்பது வயது ஆட்களைப் போல ஆகிப்போனார். பணமும் , திறமையும் மக்கி பழைய லெகசி மட்டும் கூட ஒட்டிக்கொண்டு நின்றது.
விட்டகுறை தொட்டகுறையாக வழக்குகளும், தண்டப்பணங்களும் வந்து சொத்தை அழித்து ஓய பிரேசில் அரசு பாஸ்போர்ட்டை முடக்கியது. விளைவு, புதிய ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக பராகுவே நாட்டிற்குள் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நுழைந்து சிறையில் இருக்கிறார்.
இந்த நிலையில் தனது முன்னாள் அணி வீரரும் ஆசானுமானா ரொனால்டினோவை பிணையில் விடுதலை செய்யவும் , பிரேஸிலில் அவருக்கு இருக்க கூடிய கடன் தொகையான 4 மில்லியன் பவுண்டுகளைச் செலுத்தவும் லியனல் மெஸ்ஸி வழக்கறிஞர்களை நியமித்திருப்பதாக செய்திகள் வெளியாகின, ஆனால் மெஸ்ஸி அதை மறுத்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்படி இருந்த ஒரு வீரன் ஒழுங்கற்ற வாழ்க்கைப் பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டானே என்று மெசேஜ் சொல்லலாம் என்று நான் தட்டச்சுகிற இடைவெளியில் , பராகுவே சிறையில் கைதிகள் முண்டியடித்துக்கொண்டு ரொனால்டினோவிடம் கையொப்பம் வாங்குகிற படங்களும் வீடியோக்களும் வந்து சேர்கின்றன.கெட்டாலும் மேன்மக்கள்.
-Kishoker Stanislas