சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாத நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் சுமார் 1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த கைதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யப்படவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.தென்னகோன் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதன் காரணமாக, சிறைச்சாலைகளில் இருக்கும் சிறுகுற்றங்களுக்காக ஒருவருடத்திற்குக் குறைவான சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும், பிணை செலுத்த முடியாமல் இருப்பவர்களையும் விடுதலை செய்வது குறித்து ஆராய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்திருந்தார்.
சிறுகுற்றங்களுக்காக ஒருவருடத்திற்குக் குறைவான தண்டனையை அனுபவித்துவருவோரும், பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாதோருமாக சுமார் 4000 பேர் நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.