ஓர் உலகளாவிய பிரச்னையை அமெரிக்காவும், அதன் அதிபரான ட்ரம்ப்பும் இன்னும் கொஞ்சம் சீரியஸாக அணுகியிருக்கலாம் என்கிறார்கள் அனைவரும்.
“மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துவருகிறது. நமது தலைமுறையின் ஆகப்பெரும் ஆபத்து கொரோனாதான். மக்களும் அரசாங்கம் எடுக்கவிருக்கும் முடிவுகளுமே இந்த உலகத்துக்கான அடுத்த நம் நாள்களை முடிவுசெய்யப்போகிறது. இங்கு முற்றிலுமாய் சிதைந்து மாறப்போவது மருத்துவம் மட்டுமல்ல, பொருளாதாரமும்தான்.
சேப்பியன்ஸ், ஹோமோடியஸ், 21 lessons for 21st Century போன்ற புத்தகங்களின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான யுவல் நோவா ஹராரியின் ஃபினான்ஷியல் டைம்ஸ் கட்டுரையின் ஆரம்ப வரிகள் இவை.
மார்ச் 20-ம் தேதி இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. மார்ச் 20-ம் தேதி, கொரோனாவால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,75,550. நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இக்கட்டுரைக்கான தரவுகள் எழுதும்போது அது 7,65,031. நீங்கள் படிக்கும்போது இன்னும் இது அதிகமாகவே ஆகியிருக்கும். இதை விடத் தெளிவாக கொரோனா எந்த வேகத்தில் பரவிவருகிறது என்பதை விளக்கிவிட முடியாது. இதுவும் உங்களைப் பீதியாக்கவில்லை என்றால், இப்படிச் சொல்கிறேன்.
இப்போது உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக முதலிடம் பிடித்திருக்கிறது அமெரிக்கா.