புவி நிலப்பரப்பைக் கொரோனா சுற்றிவளைத்து உலகமே `லாக்டவுன்’ நிலைக்குச் சென்றுவிட, நடுக்கடலில் மாட்டிக்கொண்டது ஸான்டம் கப்பல். அதுவும் எப்படி? கொரோனோ நோயாளிகளுடன்!
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஹாலந்து அமெரிக்கா (Holland America Line) என்ற சொகுசுக் கப்பல் நிறுவனத்திற்கு சியாட்டில் தலைமையகம். அலாஸ்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா என்று உலகில் எங்கெல்லாம் சமுத்திரம் உள்ளதோ அங்கெல்லாம் இந்நிறுவனம் சொகுசுப் பயணத்திற்குக் கப்பல்களை மிதக்கவிட்டுள்ளது. பல அடுக்குகளில் நட்சத்திர விடுதிபோல் கட்டமைப்பு; வகைவகையான உணவு, இசை, கேளிக்கை என்று அவர்களது சேவையெல்லாம் ராஜ உபசாரம்.
நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏற்ற வகையிலான கட்டணம் என்பதால் பயண விரும்பிகளால் எப்போதுமே அதன் சொகுசுப் பயணங்கள் பிஸியே.
எம்/வி ஸான்டம் (Zaandam) என்ற அவர்களின் கப்பல் மார்ச் 7-ம் நாள் தென் அமெரிக்காவிலிருந்து 14 நாள் பயணமாகக் கிளம்பியது. அதனுள் 1243 பயணிகள், 586 கப்பல் பணியாளர்கள். பயண வழியில் உள்ள முக்கியமான நகரங்களில் நங்கூரமிட்டு, அங்கு ஓரிரு நாள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்வது போலத்தான் இக்கப்பல்களின் பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன்படி கப்பலும் கிளம்பியது; மிதந்துகொண்டிருந்தது.
அதற்குள் புவி நிலப்பரப்பைக் கொரோனா சுற்றிவளைத்து உலகமே `லாக்டவுன்’ நிலைக்குச் சென்றுவிட, நடுக்கடலில் மாட்டிக்கொண்டது ஸான்டம் கப்பல். அதுவும் எப்படி? கொரோனா நோயாளிகளுடன்!
முதலில் அக்கப்பல் தங்கள் நாட்டில், ஊரில் கரையிறங்க அனுமதியில்லை என்று ஒவ்வோர் அரசாங்கமும் நிராகரிக்க, அதுதான் பிரச்னையாக உருவானது.
அனைவரும் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு நோயாளிகளுடனும் சடலங்களுடனும் எங்கும் செல்ல வழியின்றி பனாமா கரையோரம் தற்சமயம் நங்கூரமிட்டுள்ளது அக்கப்பல். எவரும் கப்பலிலிருந்து இறங்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை.
பனாமா கால்வாய் வழியாக ஃபுளோரிடா சென்றுவிடுகிறோம் என்று கேட்டுப்பார்த்திருக்கிறார்கள். அதையும் மறுத்துவிட்டது பனாமா.
எனவே, ஹாலந்து அமெரிக்கா நிறுவனம் மற்றொரு கப்பலை அனுப்பி, ஸான்டம் கப்பலில் உள்ள ஆரோக்கியமான பயணிகளை அதிலிருந்து இக்கப்பலுக்கு மாற்றி, அவர்களை அமெரிக்கா கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது.
கப்பலில் மாட்டிக்கொண்டவர்களுக்குத் தேவையான உணவு அளிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச, தொடர்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ வசதிகளுக்கான மருத்துவர்களும் உள்ளனர்.
ஆயினும் இச்சூழ்நிலையில், ஊர் திரும்பினால் போதும் என்ற நிலையில், பயணிகளுள் ஒருவரான வெய்ன், `நாங்கள் கடலில் சிக்கியுள்ளோம். இப்பெரும் பிரச்னையிலிருந்து எங்களைக் காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கங்கள் முன்வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
அது என்று நடக்கும், எப்படி நடக்கும் என்று தெரியாத நிலையில் சொகுசுப் பயணம் சென்றவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
-நூருத்தீன்