அக்குறணை பிரதேசத்தில் அண்மையில் இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பயணித்ததாக நம்பப்படும் வேன் ஒன்றை கம்பளை பொலிஸார் இனம்கண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வேன் தொற்று நீக்கம் செய்யப்படாமையினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்தனர்.பின்னர் குறித்த வேன் இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, புஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குச் சொந்தமான குறித்த வேனை ராகலை பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவர் நீர் கொழும்பு பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் செலுத்தி வந்ததாகவும் இந்நிலையிலேயே கடந்த 15 ஆம் திகதி குறித்த வேனில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் கட்டுநாயக்காவில் இருந்து அக்குறணை பகுதிக்கு பயணித்ததாக தெரியவந்துள்ளது .
இதேவேளை,, கண்டுபிடிக்கப்பட்ட வேனில் கொரோனா நோயாளி பயணித்து 14 நாட்களுக்கு மேல் கடந்துள்ளமையால் அதில் தொற்று நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென உடபளாத்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில், நேற்று (31) இரவு 10 மணியளவில் குறித்த. வேன் இனம் தெரியாத நபர்களால் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.