ஹாங்காங், சோல் அல்லது டோக்கியோ போன்ற ஆசியப் பெரு நகரங்களில் இப்போதெல்லாம் நீங்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால், உங்களை பலரும் வித்தியாசமாக பார்ப்பார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, முகக்கவசம் அணிவது பல நகரங்களில் கட்டாயமாகி இருக்கிறது. அப்படி அணியவில்லை என்றால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் போல நடத்துகிறார்கள்.
செக் குடியரசு மற்றும் ஸ்லோவேகியா போன்ற நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஆனால் அதுவே பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முகக்கவசம் அணியாமல் நடப்பது என்பது பெரிய தவறாக கருதப்படுவதில்லை.
ஒரு சில நாட்டு மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக பின்பற்ற, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் இதனை பொருட்படுத்தாமல் இருப்பது ஏன்?ஏனென்றால் இது அரசாங்க உத்தரவுகள் அல்லது மருத்துவ அறிவுரைகளை சார்ந்தது மட்டுமல்ல.
இது அந்தந்த நாடுகளின் கலாசாரம் மற்றும் வரலாற்றையும் சார்ந்ததாகும். ஆனால், இந்த வைரஸ் தொற்று மிகவும் மோசமானால், இது மாறுமா? உலக சுகாதார அமைப்பு என்ன கூறுகிறது?
கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இந்த விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் மிகத் தெளிவான அறிவுரையை கூறியிருக்கிறது. இரண்டு விதமான மக்கள் மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதுமானது.
ஒன்று உடல்நலம் சரியில்லாதவர்கள், மற்றும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள். மற்றொன்று, கொரோனா இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் நபர்களை பார்த்துக் கொள்பவர்கள்.
கொரோனா வைரஸ் நெருக்கடி: மோதி அரசு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் என்ன?
வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கொரோனா அறிகுறியா?
வேறு யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை. அதற்கு பல காரணங்களும் உண்டு. ஒன்று முகக்கவசம் போதிய பாதுகாப்பு தரும் என்று கருதப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று உடலில் இருந்து வெளியேறும் துளிகள் வழியே மற்றவர்களுக்கு பரவலாம் என்றும் வைரஸ் கிருமி படர்ந்திருக்கும் ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் தொட்டால் அதன் மூலமாகவும் இது பரவும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமில்லாமல், முகக்கவசம் ஒருவருக்கு தவறான பாதுகாப்பு உணர்வை வழங்கலாம். எனினும் ஆசியாவில் சில பகுதிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிகிறார்கள். அவ்வாறு அணிவது பாதுகாப்பானதாகவும், மரியாதையாகவும் பார்க்கப்படுகிறது.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளில், உடல்நலம் நன்றாக இருப்பவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் இந்த வைரஸ் தொற்றை பரப்புவார்கள் என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. அதனால், மற்றவர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள பலரும் முகக்கவசம் அணிகிறார்கள்.
இதில் சில அரசாங்கங்களே முகக்கவசம் அணியுமாறு மக்களை வலியுறுத்துகின்றன. சீனாவின் சில பகுதிகளில் நீங்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் கைது செய்யப்படலாம் அல்லது தண்டிக்கப்படலாம்.
அதே நேரத்தில் இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில், பலரும் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை மறைப்பதாக சந்தேகம் உள்ளதால், அங்கு பெருநகரங்களில் பலரும் தங்களை மற்றவர்களிடம் இருந்து காத்துக் கொள்ள முகக்கவசங்கள் அணிகிறார்கள்.
சில நாடுகளில் கொரோனா தொற்று பிரச்சனை ஏற்படும் முன்னரே இவ்வாறு முகக்கவசம் அணிவது அவர்கள் கலாசாரத்தில் உண்டு. அவை ஃபேஷனாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஹாங்காங்கில் உள்ள சாலையோர கடைகளில் ஹெலோ கிட்டி முகக்கவசங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன.
2003ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு, அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் அப்போதில் இருந்தே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தன. குறிப்பாக ஹாங்காங். அங்கு சார்ஸ் வைரஸ் தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்தனர்.
அதனால், இது போன்ற சமூகங்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு இதுதான். பல ஆசிய நாடுகளில் பழைய நினைவுகள் நீங்காத வடுக்களாக பதிந்திருக்கின்றன.
இந்நிலையில், தென் கிழக்கு ஆசியாவில், குறிப்பாக அதிக மக்கள் தொகை இருக்கும் நகரங்களில், காற்று மாசு காரணமாக முகக்கவசம் அணிவது வழக்கமாக இருக்கிறது.
இப்படியிருக்க இரண்டு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி இருக்கின்றன. முகக்கவசம் அணிவதால் வைரஸ் பரவுவதைக் குறைக்க முடியும் என செக் குடியரசு அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், அதற்கான எந்த அறிவியல் ஆதாரத்தையும் அவர் அளிக்கவில்லை. இந்நிலையில், பொது வெளியில் செல்லும் அனைவரையும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்க வேண்டுமா என்ற விவாதத்தில் அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண துணியால் ஆன முகக்கவசங்கள் கூட வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது என்95 ரக முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரே முகக்கவசத்தை பலமுறை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக சுகாதாரப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
கவனத்தை ஈர்க்க முகக்கவசம் அணிகிறார்களா?
முகக்கவசம் அணிவது வைரஸ் தொற்றின் அபாயத்தை நினைவுப்படுத்தும் விதமாக இருந்தாலும், தங்களின் தனிப்பட்ட சுகாதார முறையை வெளிப்படுத்த இது அணியப்படலாம் என்று கூறப்படுகிறது.
“நீங்கள் வெளியே போகும் முன்பு முகக்கவசத்தை அணிந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. சொல்லப்போனால் சீருடை அணிந்து கொள்வது போல. முகத்தை தொடாமல் இருப்பது, கூட்டமான இடங்களை தவிர்ப்பது அல்லது சமூக விலகலை பின்பற்றுவது போன்ற ஒருவரது தனிப்பட்ட சுகாதார முறையை அது காண்பிக்கும்” என்கிறார் நடத்தையியல் நிபுணரும் பேராசிரியருமான டொனால்டு லா.
“முகக்கவசங்கள் பயனற்றவை என்று கூறிவிட முடியாது. ஆனாலும் அதனால் பலன் இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். அதனால்தான் அவை சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்றன” என்கிறார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணர் பெஞ்ஜமின் கெளலிங்.
இருப்பினும் இதனால் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. ஜப்பான், இந்தோனீசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் முகக்கவசங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பயன்படுத்திய முகக்கவசங்களை மக்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.
இது சுகாதாரக் கேடானது.. சில பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் கள்ளச்சந்தைகளில் விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகள் பலவற்றில் முகக்கவசங்கள் அணியும் பழக்கம் கிடையாது.
முகக்கவசம் அணியும் சிலர் தாக்கப்படும் நிலையும் அங்குள்ளது. அங்கு முகக்கவசம் அணிந்து செல்லும் பலரும் ஆசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில நாடுகள் முகக்கவசம் அணிய அறிவுரை வழங்குவது சரியானதாக இருக்கலாம். தற்போது உலக சுகாதார அமைப்பின் அறிவுறையை வல்லுநர்கள் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
கணக்கில் வராத நபர்கள்
இந்த வைரஸிற்கான அறிகுறி ஏதும் இல்லாமலேயே பலரும் இத்தொற்றை பரப்புகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் வெளிவருகின்றன.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவருக்கு இதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என அந்நாட்டு அரசின் தரவுகள் கூறுவதாக செளத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் கூறுகிறது.
யோகோஹாமா துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த டைமன்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதில் பாதி பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இவ்வாறு பலருக்கும் எந்த அறிகுறியும் இல்லை என்பதற்காக, அவர்கள் மற்றவர்களுக்கு பரப்பமாட்டார்கள் என்று நினைக்க முடியாது. ஒருவேளை அனைவரும் முகக்கவசம் அணிந்தார்கள் என்றால், அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு வைரஸ் பரப்புவதை தடுக்க முடியும்தானே என்ற கேள்வி எழுகிறது.
சீனாவில் ஏற்பட்ட 80 சதவீத கொரோனா பாதிப்புகள் இவ்வாறு எந்த அறிகுறிகளும் காட்டாதவர்களிடம் இருந்து பரவியிருக்கலாம் என அந்நாட்டில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இது வெறும் ஒரே ஒரு ஆய்வின் முடிவுதான். எதிர்காலத்தில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு இதில் பல விஷயங்கள் சேர்க்கப்படலாம்.