இலங்கைக் கடற்படையினரால் தென் ஆழ்கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 2, 000 கோடி ரூபாவையும் விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போதைப் பொருளானது பாகிஸ்தானிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி, அங்குள்ள கடத்தல்காரர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என சந்தேகிக்கத்தக்க பல தகவல்களை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.
கரையில் இருந்து 835 கிலோ மீற்றர் தூரத்தில் ஆழ் கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும், அதனை கடத்திய ஈரானிய படகும், அதில் பயணித்த 9 பாகிஸ்தான் கடத்தல்காரர்களும் திக்கோவிட்ட துறைமுகத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டனர்.
அத்துடன் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையின் ‘சயுர’ நடவடிக்கை கப்பலின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட அனைத்து கடற்படையினரும் 14 நடகளுக்கு விசேட தனிமைப்படுத்தல் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.