சீனாவின் சென்ஷேன் நகரில் பூனை மற்றும் நாயை மனிதர்கள் உட்கொள்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் வூஹான் நகரில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் சந்தை ஒன்றில் இருந்துதான் கொரோனா வைரஸ், மிருகங்களிடம் இருந்து மனிதனுக்குப் பரவியுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து உடனடியாக வன விலங்குகள் விற்பனை மற்றும் உட்கொள்ளுதலுக்குத் தடை விதித்து சீன அரசாங்கம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சீனாவின் சென்ஷேன் எனும் துணை மாகாண நகரில் பூனை மற்றும் நாயைச் உட்கெர்ளளத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்ஷேன் மாகாண அரசு வெளியிட்டுள்ள தகவலில், ‘நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டும்தான் மற்ற விலங்குகளை விட மனிதனிடம் நெருக்கமாகப் பழகுகின்றன. எனவே அதன்மூலம் நோய் பரவலைத் தடுக்க இந்தத் தடை அவசியமாகிறது. அத்துடன் மனிதப் பண்பாடு குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக இத்தடை அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது எதிர்வரும் மே முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது.
சீனாவில் வருடாந்தம் ஒரு கோடி நாய்களும் 40 இலட்சம் பூனைகளும் கொல்லப்படுவதாக கலாநிதி பீட்டர் லீ தெரிவித்துள்ளார்.