ilakkiyainfo

ஸ்பெயின், இத்தாலியில் குறையத் தொடங்கியது கொரோனா தாக்கம்; அமெரிக்காவின் நிலை என்ன?

விரைவில் மீளுமா இத்தாலி?

உலகிலேயே இத்தாலியில்தான் கொரோனாவால் அதிகம் பேர் இறந்துள்ளனர். 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இத்தாலியில் தற்போது சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் வெளியாகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளது. தினமும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் 1,24,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட, தற்போது அது குறைந்து வருகிறது.
italy-4
ஸ்பெயினில் குறையத் தொடங்கிய கொரோனா தாக்கம்

கொரோனா தொற்றால் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்படும் கட்டத்தை கிட்டத்தட்ட தாண்டும் நிலையில் இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றால் ஒருநாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், அந்நாட்டில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இதுவரை 1,26,168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 11,947 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் குறையத் தொடங்கிய கொரோனா தாக்கம்

கடுமையான காலத்திற்கு தயாராகுங்கள் – எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

கடுமையான வாரத்திற்குத் தயாராகுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த வாரம் கொரோனா வைரஸினால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நேரலாம் என வெள்ளை மாளிகை கணித்திருந்தது.

முன்பே கூறியது போல உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரித்த அதிபர் டிரம்ப், ஈஸ்டர் தினத்தன்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் அறிவுரை வழங்கினார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,544 ஆக அதிகரித்து, உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

Exit mobile version