இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், 178 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 34 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 257 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதார கட்டமைப்பின் பிரகாரம், 2000 கோவிட் 19 நோயாளர்களுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.சீ மெக்னிபிகா கப்பலில் பயணித்த இலங்கையர் மீட்பு
இத்தாலிக்கு சொந்தமான எம்.எஸ்.சீ மெக்னிபிகா சொகுசு சுற்றுலா கப்பலில் கடமையாற்றிய இலங்கையரான அநுர ஹேரத்தை கடற்படையினர் இன்று தமது பொறுப்பிற்கு எடுத்தனர்.
குறித்த நபர் கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இத்தாலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் இருந்தே குறித்த நபர் பாதுகாப்பாக பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
சொகுசு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட கப்பலின் ஊழியர், காலியிலுள்ள கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம்.எஸ்.சீ மெக்னிபிகா சொகுசு கப்பல் எரிப்பொருள் நிரப்புவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வருகைத் தந்த வேளையிலேயே இலங்கையரை கடற்படையினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
குறித்த கப்பலில் கடமையாற்றிவரும் தன்னை இலங்கையில் கரையிறக்குமாறு, குறித்த ஊழியரான அநுர ஹேரத் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த பின்னணியிலேயே குறித்த நபரை இலங்கை கடற்படை தமது பொறுப்பிற்கு எடுத்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார கூறினார்.
இவ்வாறு தமது பொறுப்பிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட குறித்த நபர், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டே, நாட்டிற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெர்மன் பெண்ணொருவர் இலங்கை மருத்துவமனையில் அனுமதி
எம்.எஸ்.சீ மெக்னிபிகா சொகுசு கப்பலில் பயணம் செய்த சுற்றுலா பயணியான ஜேர்மன் நாட்டு பெண்ணொருவர் இலங்கையில் இன்று தரையிறக்கப்பட்டார்.
ரோஸ்மேரி மாக்ரெட் என்ற 75 வயதான பெண்ணொருவர் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருதய நோய் காரணமாக சிகிச்சைகளை வழங்குவதற்காக கடற்படையினர் குறித்த பெண்ணை கரையிறக்கி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துரை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணி முதல் 2 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதுடன், மீண்டும் 9ஆம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 14,966 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 20ஆம் தேதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப் பகுதிக்குள் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் 3,751 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.