அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளராகவும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் களநிலை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் 6 ஆம் திகதி 12 மணிக்கு இந்த களநிலை அறிக்கை வெளியிடப்பட்ருந்தது.

இதன்படி உலகில் கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றானது வீரியமாக பரவிவருகின்றது. அதன் நிமித்தம் இன்றைக்கு 12 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே தற்போது இலங்கையில் 12 மணி வரைக்கும் 176 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே, பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல எதிர்வுகூறல்களையும் பல பிரேரணைகளையும் நாம் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வருகின்றோம். அந்தவகையில் இன்றையதினம் இந்த கொரோனா தொற்றை இலங்கையில் தடுப்பதற்கு நாம் என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டுமென்று நாம் கூறியுள்ளோம்.

அண்மையில் சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்ததன் படி இலங்கையில் 2 ஆயிரம் வரையிலான கொரோனா தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான வசதிகளே காணப்படுகின்றன. இந்த எல்லை மீறப்படுமிடத்து எமது சுகாதாரத்துறை நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை கொண்டிராது. வசதிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆகவே நாங்கள் இந்த நிலையை 2 ஆயிரத்திற்குட்பட்டவாறே மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை நடைமுறைப்படுத்த தற்போதுள்ள சமூக இடைவெளியை 80வீதம் மட்டில் அகில இலங்கை ரீதியில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு இனங்காணப்பட்ட நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை தகுந்த முறையில் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

அத்தோடு சுகாதார செயற்பதடுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தவகையில் தற்போதுள்ள நிலையை மிகவும் தீவிரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சில நடவடிக்கைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

அந்தவகையில்,

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அவர்களுடன் பழகி அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களையும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். இந்தப் பரிசோதனையானது 70 வீதம் தான் சரியான முடிவைக் காட்டும். எனவே இந்த நோய் குணம் குறியைக் கொண்டவர்கள் 30 வீதமானவர்கள் சில வேளைகளில் தவறிவிடப்படலாம். ஆகவே இந்த பரிசோதனையை திரும்பத்திரும்ப 3 முறை செய்வதன் மூலம் நோயால் இனங்காணப்பட்டவர்களை நாம் மேலும் இனங்காண முடியும்.

ஆகவே இந்த நடவடிக்கையை விஸ்தரிக்கும் படி நாங்கள் அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் கூறியிருந்தோம். ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அதைப் பணித்த போதும் இது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய தொழில்நுட்பக்குழு அந்த நடவடிக்கையை சற்று தாமதிப்பதாக நாங்கள் அறிகின்றோம். இதுவொறு நல்லவிடயம் அல்ல.

அதனை நடைமுறைப்படுத்தும் படி சகல அதிகாரிகளுக்கும் நாம் எமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.

சமூக இடைவெளியை நாங்கள் கூடியவரை பேணுவது, ஆனால் சமூக இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் இடையிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதன் மூலம் அந்த சமூக இடைவெளியானது மேலும் குறைக்கப்படுகின்றது.

அத்துடன் தம்புள்ளை பொருளாதார மையங்களுக்கான மற்றும் தங்காலை, நீர்கொழும்பு மீன் சந்தைக்கான வரையறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

அதாவது அரசாங்கம் மாவட்ட மட்டத்திலான போக்குவரத்தை தடைப்படுத்தியபோதிலும் அதனை மீறும் படி சிலசில விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவும் ஒரு நல்ல விடயமல்ல.

ஆகவே சமூகத்திலுள்ளவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சமூக இடைவெளியை பேண முன்வரவேண்டும். அரசாங்க அதிகாரிகளுக்கும் நாங்கள் இது தொடர்பான அறிவித்தலை வழங்கியுள்ளோம்.

_111638034_gettyimages-1209137672சரியான முறையில் பிழையற்ற முறையில் கைகளை கழுவுவதையும் முகக்கவசம் அணிவதையும் பின்பற்றுதல் . அதாவது சரியான முறையில் உலக சுகாதார அமையத்தால் குறிப்பிடப்பட்ட விதிக்குட்பட்ட வகையில் கைகளை கழுவும் பொதுதான் உண்மையில் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் சாதாரணமாக கைகளை கழுவும் போது அந்தக் கிருமிகள் முற்றுமுழுதாக அழிக்கப்படுவதில்லை . ஆகவே கைகழுவும் பொறிமுறையை சரியாக உணர்ந்து அதனை செயற்படுத்த வேண்டும். அத்தோடு முகக்கவசம் அணிவது ஒரு நல்ல விடயம். முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களால் சமுதாயத்தில் கொரோனா தொற்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. அதாவது இலங்கையில் கொரோனா தொற்றின் நிலையானது 3 ஆவது நிலையே காணப்படுகின்றது. இவ்வாறு முகக்கவசம் சரியான முறையில் அணியும் போது இந்த கொரோனா தொற்றானது 3 B ற்குள்ளேயே மட்டுப்படுத்தப்படுகின்றது. 4 ஆவது நிலைக்கு செல்வது தடுக்கப்படுகின்றது.

அத்தோடு சுகாதாரத் துறையில் காணப்படும் மனித வளத்தையும் பௌதீக வளத்தையும் விஸ்தரிக்க வேண்டும். இது தொடர்பில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதாவது நோயாளர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் நோயாளர்கள் தேவையற்ற ரீதியில் வைத்தியசாலைக்குள் வந்து அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகளை மறைத்து வருவதனால் அவர்கள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதனால் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட சுகாதார பணியாளர்களை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நிலை நீடிக்குமானால் வெகுவிரைவில் சுகாதார துறையினருக்கான பற்றாக்குறை நிலவும். ஆகவே இதனை தடுப்பதற்கு பொதுமக்கள் நாங்கள் குறிப்பட்டுள்ள 1390 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த இலக்கத்தின் ஊடாக அவர்களுக்கான தகவல்கள் வழங்கப்படும். தேவையேற்படின் மாத்திரம் அவர்கள் வைத்தியசாலைக்கு வர வேண்டும். அல்லது வைத்திய ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும்.

அத்துடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிற்கான மேம்படுத்தல் நிலை தொடர்பில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்துமாறு பணித்திருந்தோம். ஆகவே அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு நாங்கள் மேலே குறிப்பிட்ட பொறிமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்துமிடத்து. நாங்கள் இந்த கொரோனா நோய்த் தொற்றை வீரியமாக வெற்றிகொள்ள முடியும். அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 )48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். இதை தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version