இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்கு பத்து டன் மருந்தை இன்று அனுப்பி வைத்துள்ளது இந்தியா.
இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் இந்த மருந்து வகைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்றைய தினம் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றிகளை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் ஊடாக அவர் இந்த நன்றியை பகிர்ந்துள்ளார்.
கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஒருவர் இந்த தொற்றுக்கு இலக்காகி இன்று உயிரிழந்திருந்தார்.
அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 255 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்
வெளிநாடுகளில்; வாழும் பல இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு நிராகரித்துள்ளது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் மாத்திரமே இந்த தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தொடர்பில் தமக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டிய பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சுவிஸர்லாந்தில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் உயிரிழப்பு தொடர்பில் மாத்திரம் அந்த நாட்டு அரசாங்கம், அந்த நாட்டு போலீஸாரின் அறிக்கையை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரான்ஸ் நாட்டில் இலங்கையர் ஒருவரும், பிரித்தானியாவில் ஐந்து இலங்கையர்களும், அவுஸ்திரேலியாவில் ஒரு இலங்கையரும் உயிரிழந்துள்ளமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக இதுவரை அந்த நாட்டு அரசாங்கங்கள் அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் ஒருவர் மாத்திரமே இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ருவந்தி பெல்பிட்டிய குறிப்பிட்டார்.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த 20ஆம் தேதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலம் வரை இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த காலப் பகுதியில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 4064 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.