கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தேவைப்படும் மாதிரிகளை மனிதர்களின் உடலில் இருந்து எடுக்க கேரளாவின் தெற்கே உள்ள கொச்சி நகரில் ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முன்பு பயன்பாட்டில் இருந்த எஸ்.டீ.டி பூத்கள் மற்றும் தென் கொரியாவில் உள்ள பரிசோதனை மையங்களை அடிப்படையாக கொண்டு கேரள மருத்துவர்கள் இந்த மாதிரிகளை சேகரிக்கும் பூத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த புதிய வகை மாதிரிகளை சேகரிக்கும் பூத்கள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக வரும் நபர்களுடன் மருத்துவ ஊழியர்கள் யாரும் நேரடியாக அவர்களை அணுக வேண்டாம். பரிசோதனைக்கு வருபவருக்கும் மருத்துவ ஊழியருக்கும் இடையில் ஒரு கண்ணாடி திரை இருக்கும்.
எனவே பரிசோதனைக்கு வரும் நபர்களிடம் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
”கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர, இன்னும் சில தொற்று நோய்களும் உள்ளன, எச் 1 என் 1 தொற்று, சின்னம்மை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அது மருத்துவ ஊழியரை பாதிக்கக்கூடும், எனவே இந்த வகையான பாதுகாப்பு நிறைந்த பரிசோதனை மையங்களையே இனி அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்கிறார் பிபிசியிடம் பேசிய மருத்துவர் கணேஷ் மோகன்.
இந்த வகையான மாதிரிகளை சேகரிக்கும் பூத் உள்ளே மின்விசிறி உள்ளது, மருத்துவர்கள் கைக்கு கூட உறை அணியத்தேவையில்லை, இந்த மையத்தின் வெளிபுறத்தில் கை உறை பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர் தங்கள் கைகளை மட்டுமே உள்ளே பொருத்திக்கொண்டால் போதும்.
”தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் ஒரு புகைப்படத்தையும், இந்தியாவின் எஸ்.டீ.டி பூத்தையும் அடிப்படையாக கொண்டே இதை உருவாக்கியுள்ளோம், விரைவில் இந்த மாதிரிகளை சேகரிக்கும் பூத்களுக்கு சக்கரம் பொருத்தி, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல இடங்களில் வைத்து பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். ” என்கிறார் மருத்துவர் கணேஷ் மோகன்.
இந்த புதிய பூத்களின் மூலம் ஒரு நாளைக்கு 500-இல் இருந்து 600 பேர் வரை கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரிக்க முடியும். ”நாங்கள் விரைவாக சோதனை கருவிகளையும் வாங்கி, அவற்றையும் இந்த பூத்தில் வைத்து பயன்படுத்த துவங்குவோம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் இந்த மாதிரிகளை சேகரிக்கும் பூத் உள்ள இடத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கிறோம்” என்கிறார் பிபிசியிடம் பேசிய மாவட்ட சுகாதார அதிகாரி குட்டப்பன்.
விரைவில் இந்த மாதிரிகளை சேகரிக்கும் பாதுகாப்பு அறைகள் தனியார் மருத்துவமனையிலும் அமைக்கப்படும் என்கிறார். கேரளாவின் கலமசேரி மருத்துவமனையில் இதுவரை 2000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பயன்படுத்தப்படும் இந்த மாதிரிகளை சேகரிக்கும் பூத் டெல்லியிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது அனைவரும் உயிர் பிழைப்பதற்கான போட்டியில் ஈடுபட்டுளோம். எனவே எந்த மாநிலம் வேண்டுமானாலும் யாருடைய யோசனைகளை பயன்படுத்தி வேண்டுமானாலும் பிழைத்துக்கொள்ளுங்கள். உயிரை காப்பாற்றுங்கள் என்கிறார் மருத்துவர் கணேஷ் மோகன்.