கொரோனா வைரஸ் தொற்றினால் ஏனைய நாடுகளைப் போன்று பாரிய பாதகமான நிலைமைக்கு முகங்கொடுக்காமலிருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் அனைவரது ஒத்துழைப்பே அவசியமானதாகும். அதற்கமைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை மாலை 7.45 மணியளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
அந்த விசேட உரையில் அவர் மேலும் கூறியதாவது :
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்ட சில நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்களின் சடலங்கள் மயானங்களுக்கு எடுத்துச் செல்லும் முறையை நீங்கள் செய்திகளின் ஊடாகக் காண்பீர்கள். நாம் வாழ்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது இந்த வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முறையிலேயே உள்ளது. எங்களது அவதானம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தான் இவ்வாறான பாரிய நோய் தொற்றிலிருந்து நாங்கள் வாழ்வதா சாவதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. அதனால் இந்த நோய் தொற்று உலகிற்கு தெரிய வந்த சந்தர்ப்பத்திலிருந்து ஜனாதிபதியுடன் அரசாங்கமும் மக்களின் வாழ்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி செயற்பட்டுள்ளது.
இந்த நிலையை புரிந்து கொண்டதால் சீனாவில் வுஹான் நகரத்தில் சிக்கியிருந்த இலங்கையர்களை உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னர் விசேட விமானத்தின் மூலம் அழைத்து வர துரித நடவடிக்கை எடுத்தோம். அவர்களை அழைத்து வரும் போது நாம் எமது நாட்டில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைத்துவிட்டோம். அந்த சந்தர்ப்பத்திலிருந்து இலங்கைக்கு வரும் நூற்றுக்கணக்கானவர்களை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் பலவற்றுக்கு அனுப்புவதற்கு ஏற்ற வகையில் மத்திய நிலையங்களை ஏற்பத்தினோம்.
தற்போது ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தக் கூடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் 40 எம்மால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் வெறுமனே தங்குமிடங்கள் மாத்திரமல்ல. சிறந்த மட்டத்திலுள்ள கட்டடங்கள், கட்டில்கள், வைத்தியர்கள், உதவியாளர்கள், மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்கள், மலசல கூட வசதிகள், சுகாதார முறையிலான உணவு, சுத்தமான குடிநீர் மாத்திரமின்றி கொத்தமல்லி அவித்து ஆயிரக்கணக்கானோருக்கு 14 நாட்களும் எவ்வித குறைவும் இன்றி கொடுக்கப்படுகின்றது.
நூங்கள் முதலாவது கொரோனா நோயாளியை அடையாளம் கண்டவுடன் சகல பாடசாலைகள் பல்கலைகழங்கள் என்பவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது என்பதற்காக யுத்த காலத்தில் கூட நாம் இவ்வாறு ஊரடங்கு சட்டத்தினை பிறப்பிக்கவில்லை. எனினும் தற்போது சுகாதார நலன் கருதியே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. எனினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுகிறது. மக்களுக்கு தேவையான உணவு இ மருந்து என்பன வீடுகளுக்கே விநியோகிக்ப்படுகின்றன. என்னுடையதும் ஜனாதிபதியினதும் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால் அரச சேவையாளர்கள் 15 இலட்சம் பேர் வீடுகளில் உள்ளனர். எனினும் ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்குவதற்கு இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிந்துவிட்டது. அது மாத்திரமல்ல. வேலையற்ற பட்டதாரிகள் 40 ஆயிரம் பேரை நாம் அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தோம். அவர்களை இந்த தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் இணைத்துக் கொண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது மாத்திரமன்றி சமுர்த்தி பயனாளர்கள் நாட்டில் 17 இலட்சம் பேர் உள்ளனர். காத்திருப்புப் பட்டியலில் மேலும் 6 இலட்சம் பேர் இருக்கின்றார்கள். மொத்தமாக 23 இலட்சம் பேருக்கும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பாராட்டியூள்ளமை முழு உலகிற்கும் தெரியூம். இந்த சந்தர்ப்பத்தில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அரசாங்கத்தின் நேரடி நிவாரணம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் வாத விவாதங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை. நாட்டில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு நாங்கள் நிவாரணத்தை வழங்கியது நாட்டின் வருமானம் சிறந்த முறையில் இருந்த போது அல்ல. இப்போது அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கப்பெறும் சகல வழிகளும் சூனியமாகிவிட்டன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் இனம் மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை. எடுக்கவூம் போவதில்லை. சகல அரசியல் கட்சித் தலைவர்களும் மிகவூம் ஆர்வத்துடன் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த தருணம் இது. மதம் இனம் என்ற ரீதியில் பிரிந்து செயற்படக் கூடிய காலம் அல்ல. இந்த நேரத்தில் எங்களுக்கு இருக்க வேண்டியது ஒரே எதிரி மாத்திரமே. அது கொரோனா எனும் எதிரியே. நாங்கள் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் இந்த உண்மையை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.இது நாடு தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம். பொதுவாக மனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே எங்களுக்கு இந்த புதை குழியில் இருந்து மறுபக்கத்துக்குப் பாய்ந்து செல்ல முடியூம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வரலாற்றில் நாங்கள் இதனை விட பாரதூரமான கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றௌம். பயங்கரவாதம் இருந்த காலப்பகுதியில் 20இ 30 வருடங்களுக்கு முகாம்களில் வாழ்ந்திருக்கின்றௌம். பிள்ளைகளுடன் மரண பயத்தில் நடு இரவில் இலை குழைகளை விரித்தும் உறங்கியிருக்கிறௌம். அவ்வாறு அர்ப்பணித்த உங்களுக்கு நாட்டுக்காக இந்த காலப்பகுதியில் வீட்டில் இருப்பது பெரிய விடயமில்லையென என தெரிவித்தார்.