சீன அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவின் மாநிலமொன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவின் மிசூரி மாநிலமே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் ஆபத்து குறித்த உண்மைகளை சீன தலைவர்கள் மறைத்தனர் என மிசூரி மாநிலம் குற்றம்சாட்டியுள்ளது.
குடியரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மிசூரிமாநிலத்தின் அதிகாரிகள் சமஸ்டி நீதிமன்றில் சீனாவிற்கு எதிரான வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன் சீனா நஸ்டஈட்டை செலுத்தவேண்டும், எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொவிட் 19 மூலம் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த உண்மைகளையும் அது மனிதர்கள் மத்தியில் பரவக்கூடியது என்பதையும் சீனாவின் தலைவர்கள் மறைத்தனர், எனமிசூரியின் சட்டமா அதிபர் எரிக் ஸ்கிமிட் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் மிசூரிமாநில அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
வுகானில் வைரஸ் குறித்து வெளியான ஆரம்ப கட்ட தகவல்களை சீன அதிகாரிகள் தணிக்கை செய்தனர், முன்கூட்டியே எச்சரித்தவர்களை மௌனமாக்கினர் என மிசூரி அதிகாரிகள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் மனிதர்களிடமிருநது மனிதர்களிற்கு பரவாது என சீன அதிகாரிகள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர் எனவும் மிசூரி அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவின் இறைமை விடுபாட்டுரிமை காரணமாக வெளிநாட்டு அரசாங்கங்களிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை சாத்தியமில்லை என்பதால் இந்த வழக்கு வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவு என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.