ஈக்குவடார் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பல் எனக் கூறி ஒரு சாம்பல் பெட்டியையும் அவருக்கு வழங்கினர்.
ஆனால் மூன்று வாரமாக மருத்துவமனையில் கோமாவில் இருந்த மரூரி வியாழக்கிழமையன்று கோமாவிலிருந்து மீண்டு சுய நினைவுக்குத் திரும்பியுள்ளார். மருத்துவர்களிடம் தன்னுடைய சகோதரிக்கு அழைக்குமாறு கேட்டுள்ளார்.
De no creer. Alba Maruri, 74 años, paciente de Covid-19 fue dada por muerta el 27 de marzo en hospital del Suburbio y su familia recibió sus cenizas. Resulta que cremaron a otra persona y Alba estuvo inconsciente 3 semanas hasta ayer, que preguntó por su hermana. #Guayaquil pic.twitter.com/vuTvbrGpz8
— LaHistoria (@lahistoriaec) April 25, 2020
இந்த செய்தி கேள்விப்பட்டு அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டில் இருப்பது யாருடைய சாம்பல் எனத் தெரியவில்லை.
இந்த குழப்பத்திற்காக மருத்துவமனை அந்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஈக்குவடார் நாட்டில் அதிகம் கொரோனாத்தொற்று பரவும் இடமான க்வாயக்வில் என்னும் நகரில் மரூரி வசிக்கிறார்.
ஈக்குவடார் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 22,000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 600 பேர் இறந்துள்ளனர்.
கடந்த மாதம் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதற்குச் சிரமம் ஆகிய காரணங்களால் மரூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என எல் கமெர்சியோ என்னும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 27 அன்று அவர் இறந்துவிட்டார் எனக் கூறப்பட்டது. மருத்துவமனையில் ஒரு சடலமும் காண்பிக்கப்பட்டது. ஆனால் சமூக விலகல் காரணமாகத் தூரத்திலிருந்து பார்க்குமாறு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மரூரியின் உறவினர் ஜைமி மோர்லா அது மரூரி என மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.
“எனக்கு அவர் முகத்தைப் பார்க்க அச்சமாக இருந்தது. ஆனால் இறந்தவரின் முடியும் தோலும் இவரைப் போலவே இருந்தது” என ஜைமி ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
ஆனால் வியாழக்கிழமை மரூரி மருத்துவமனையில் சுய நினைவுக்குத் திரும்பினார். அவர் தன் பேரை சொன்னபோது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. தன் வீட்டு தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து அவரின் சகோதரியைத் தொடர்புகொள்ளக் கூறியிருக்கிறார்.
அதன்பின் மருத்துவமனையிலிருந்து அவர்கள் வீட்டுக்கு ஒரு குழு சென்று மன்னிப்பு கேட்டுள்ளது என எல் கமெர்சியோ தெரிவிக்கிறது.மேலும் இந்நேரத்தில் மருத்துவமனையில் அதிக இறப்புகள் நிகழ்வதால் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
“இது மிகவும் அதிசயம். ஒரு மாதமாக அவர் இறந்துவிட்டார் என நாங்கள் நினைத்துள்ளோம். மேலும் வேறு யாருடைய சாம்பலையோ வைத்திருந்திருக்கிறோம்” என்றார் மரூரியின் சகோதரி ஆரா.
இந்த குழப்பத்திற்கான நஷ்டஈடு மற்றும் இறுதிச் சடங்கிற்காகச் செலுத்திய தொகை ஆகியவை மருத்துவமனை தர வேண்டும் என அந்த குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.