இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை அழிப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
‘தடுப்பூசி கண்டுபிடிக்கிறவரைக்கும் நமக்கெல்லாம் விடிவுகாலம் இல்ல’ என தினந்தோறும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்குக் கடந்த இரண்டு நாள்களாக நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை அழிப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றமடைந்துள்ளன.
மென்மையான வட்டவடிவப் பந்து, அதன் மேல் இருக்கும் கூர்மையான முட்கள். அந்த முட்கள் ஒரு பரப்பைப் பற்றி, துளையிட்டு, அதன் வழியாக மெல்ல மெல்ல விஷக்காற்றை உள்ளே அனுப்புவதுபோலத்தான் இந்தக் கொரோனாவும்.
மனித உயிரணுக்களின்மேல் கோவிட்-19 வைரஸின் கூர்மையான பாகம் முதலில் சென்றடைந்து, பிறகு வைரஸ் உள்ளே செல்வதற்கான பாதையை உருவாக்குகிறது. இந்தக் கூர்மையான பாகத்தை உயிரணுக்களின்மேல் ஒட்டவிடாமல் செய்தால், வைரஸ் உள்ளே நுழைய வாய்ப்பே இருக்காது. இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில்தான் தற்போது இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர்.
இத்தாலியின் ரோம் நகரிலுள்ள லாசரோ ஸ்பல்லன்சானி(Lazzaro Spallanzani) தேசிய தொற்று நோய்களுக்கான கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவில், வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, மனித உயிரணுக்களில் கலந்திருக்கும் கொரோனா வைரஸை neutralize… அதாவது நடுநிலைப்படுத்தியிருக்கிறது.
உலகையே அச்சுறுத்திய இந்த பேண்டமிக் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் உலகின் பல மருத்துவ வல்லுநர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் குழு இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த முன்னேற்றம் பெரும் ஊக்கத்தையும் நிம்மதியையும் கொடுத்திருக்கிறது.
மேலும், இந்தத் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கிய Takis நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி ஆரிசிஷியோ(Luigi Aurisicchio), ‘போதிய அளவு தடுப்பூசியை உருவாக்குவதற்காகவும், உலகளவில் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காகவும் சர்வதேச அளவில் ஒத்துழைக்க எங்கள் நிறுவனம் ஆர்வமாக உள்ளது’ என்று பகிர்ந்திருக்கிறார்.
இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபாடி குறித்தும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்தும், இந்திய மத்திய அரசின் ‘விக்யான் பிரசார்’ அமைப்பைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.
“நம் உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டால் அதை நம் நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம்(Immunity) இயல்பாகவே கண்டறியும். ஒருமுறை வந்த கிருமியின் தாக்கம் மீண்டும் வந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தன்னிடமுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு அதை அழித்துவிடும். உதாரணமாகத் தட்டம்மையைச் சொல்லலாம். தட்டம்மை ஒருமுறை வந்தால் மீண்டும் வருவது அரிது என்று சொல்வது இதனால்தான்.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்குத் தடுப்பூசி அவசியம். ஒரு குறிப்பிட்ட கிருமியின் தாக்கத்தை எதிர்க்கத் தடுப்பூசி போடும்போது அது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்றால், அந்த வைரஸில் உள்ள எதிர்ப்புத்திறனூட்டியை(Antigen) எதிர்க்க, அவர் உடலில் எதிர்ப்புரதம்(Antibody) உருவாகும். மனிதனின் உடலில் 25 லட்சத்துக்கும் மேல் விதவிதமான ஆன்டிபாடிகள் உள்ளன. ஒரு நோய்க்கிருமித் தோற்று ஏற்படும்போது, அதற்கு எதிரான ஆன்டிபாடி அதனை எதிர்க்கும்.
கோவிட்-19ஐ பொறுத்தவரை அதன் கூர்மையான ஸ்பைக் புரொட்டின் மூலமாக நம்முடைய செல்களுக்குள் வைரஸைப் பரப்புகிறது. இதற்கு எதிரான ஆன்டிபாடியை நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம் தயார் செய்கிறது. இந்த ஆன்டிபாடி உருவாக சுமார் இரண்டு நாள்கள் வரை ஆகலாம். இதனால், கொரோனோ வைரஸுக்கான ஆன்டிபாடி நம்முடைய உடலில் தங்கிவிடும்.
ஒருமுறை பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் அவர்களுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தடுப்பூசியைப் பொறுத்தவரை, கோவிட்-19ஐ நியூட்ரலைஸ்(neutralize) செய்து அழிக்கும் தொழில்நுட்பத்தை தங்களின் சிறப்பம்சமாகச் சொல்கிறார்கள். சொல்லப்போனால், உலகம் முழுக்க நடைபெறும் ஆராய்ச்சிகளும் இதை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இத்தாலி இதை அடுத்தகட்ட சோதனைகளில் எந்தளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே, அதன் வெற்றியை அங்கீகரிக்க முடியும்.
கொரோனாவை நிரந்தரமாக அழிக்க அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது, 3 வகையான தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது, அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான கோடஜெனிக்ஸ் முயற்சியில் உருவாகியிருக்கிறது.
மூன்றாவது, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பிசிஜியுடன் இணைந்து தயாரித்துள்ள மருந்து. உலகிலேயே அதிக அளவு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று, சீரம். இந்தத் தடுப்பூசிகளின் சோதனைகள் வெற்றி பெற்றால் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
பொதுவாக தடுப்பூசி சோதனைகளை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல் சோதனை:
எந்த ஒரு நோய்த் தடுப்பு மருந்தாக இருந்தாலும் பல்வேறு நிலைகளைக் கடந்துதான் வர வேண்டும். அதாவது, மனித செல்களை எடுத்து அதை இரு பொருள்களில் வளர்த்து, ஒன்றில் தடுப்பு மருந்து மற்றும் கிருமித் தொற்றையும், மற்றொன்றில் கிருமித் தொற்றை மட்டும் செலுத்தியும், செல்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியலாம்.
இரண்டாவது சோதனை:
இரண்டாவது சோதனைக்காக விலங்குகளைப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக, குரங்குகளை அதிகம் உபயோகப்படுத்துவார்கள். முதல் சோதனை போலவே கிருமித் தொற்றையும், தடுப்பு மருந்தையும் செலுத்தி சோதனை செய்து பார்ப்பார்கள். பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்தப்படும். இதன் முடிவைத் தெரிந்துகொள்ள ஒரு மாதத்துக்கு மேல் ஆகும்.
மூன்றாவது சோதனை:
முதல் நிலை:
நோய் பாதிப்பு இல்லாத 100 மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அதில் 50 பேருக்குத் தடுப்பு மருந்தையும், மீதமுள்ள 50 பேருக்குத் தடுப்பு மருந்து போன்ற பொய்யான, அதாவது குளுக்கோஸ் போன்றவற்றைச் செலுத்துவார்கள். இதில், யாருக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைத் தொடர்ந்து கண்காணித்து சோதனை செய்வார்கள். மனிதர்களிடம் கிருமியைச் செலுத்தி சோதனை செய்ய மாட்டார்கள்.
இரண்டாவது நிலை:
1000 பேரைக் கொண்டு சோதனை நடத்தப்படும்.
மூன்றாவது நிலை:
இந்த நிலையில் உள்ள சோதனைகள் பல வருடங்களுக்கு நடைபெறும். கொரோனா போன்ற அவசர காலகட்டங்களில், சோதனைகளின் படிநிலைகளைக் குறைப்பதற்கான வழிகள் கையாளப்படும்.”