முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது.
‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல பெட்ரோல் ஊத்திக் கொளுத்திட்டாங்க… என் அப்பா எங்க? தண்ணி வேணும்!’’ என்று கேட்டுக்கொண்டே அந்தப் பிஞ்சுக்குரல் அமைதியானது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்து இருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தோர் ஜெயபால்-ராஜி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் நான்கு குழந்தைகள்.
அதே ஊரில் பெட்டிக்கடைகளை வைத்து நடத்திவருகிறார் ஜெயபால். மே 10-ம் தேதி ஜெயபாலும் அவரின் மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார். காலை 11 மணியளவில் ஜெயபால் வீட்டுக்குள்ளிருந்து திடீரென புகைமூட்டம் வெளியேறியதுடன், அலறல் சத்தமும் கேட்டுள்ளது.
ஜெயபாலின் வீட்டுக்குள் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் கருகிய நிலையில் ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயஸ்ரீ கொடுத்த மரண வாக்குமூலம்தான், தற்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘கடந்த 2013-ம் ஆண்டு ஜெயபாலின் தம்பி குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருவியின் கணவர் முருகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது முருகனுக்கு ஆதரவாக அ.தி.மு.க கிளைக்கழகச் செயலாளரான கலியபெருமாள் வந்தார். அந்தத் தகராறில் குமாரின் கை வெட்டப்பட்டது.
அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்புகூட வேலி அமைப்பது தொடர்பான தகராறில் ஜெயபால் மற்றும் அவரின் மனைவி ராஜியை கடுமையாகத் தாக்கினார் முருகன். இந்த நிலையில்தான் சிறுமி ஜெயஸ்ரீ தீக்கிரையானார்’’ என்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்திருக்கும் தேசிய குழந்தைகள் ஆணையம், ‘எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாள்களுக்குள் ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யான ஜெயக்குமார், ‘‘இரு தரப்பினருக்குமே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்திருக்கிறது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாள் இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்’’ என்றார்.
வாழ்வின் நிலையாமையை கொரோனா உணர்த்திக்கொண்டிருக்கும் காலத்திலும், சிறுமியைக் கொல்லும் குரூர மனம் படைத்தவர்களை என்னவென்று சொல்வது?