கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என இன்று  இரவு 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் 916 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில்,  அவர்களில் 622 பேருக்கு, பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரை கொரோனா வைரஸ் குறித்த எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இதில் அதிகமானவர்கள் கடற்படை வீரர்களாவர் எனவும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியது.

இன்று இரவு 7.30 மணி வரையிலான காலப்பகுதியில் 480 கடற்படை வீரர்களும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 35 பேரும் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர்.

அதன்படி மொத்த தொற்றாளர்களில் 515 பேர் கடற்படை மற்றும் அவர்களது தொடர்பில் இருந்தோர் ஆவர்.  குறித்த காலப்பகுதியில் ஏனைய படைப் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 11 பேர் என தெரிவிக்கும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு மொத்த தொற்றாளர்களில் 491 பேர்  முப்படையைச் சேர்ந்தவர்கள் என கூறியது.

இன்றைய தினம் இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் ஒரே ஒரு தொற்றாளரே அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர், கடற்படை வீரருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கடற்படையின் கொரோனா கொத்தணி நிலைமை கண்டரியப்பட்ட நிலையில்,  தற்போது அந்த கொத்தணி மட்டுமே வீரியத்துடன் உள்ளதாக சுகாதார பிரிவினர் நம்புகின்றனர்.

ஏனைய கொத்தணி நிலைமைகள்  முறியடிக்கப்பட்டுள்ளன.  கடற்படை மற்றும் கடற்படையினருடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மேலதிகமாக மேலும் 401 தொற்றாளர்கள் அடையாளம் காணப்போரில் உள்ளடங்குகின்றனர். அதில்  10 பேர் இராணுவத்தினர் என்பதுடன் ஒருவர் விமானப்படை வீரராவார். அதன்படி  கடர்படையுடன் தொடர்புபடாத 390 சிவிலியன்கலும் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இந் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று வரை 445 தொற்றாளர்கள்  பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் 141 பேர் கடற்படையினர் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இதுவரை இலங்கையில் 9 கொரோன மரணக்கள் பதிவாகியுள்ளதுடன்,  மேலும் 462 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் மேலும் 108 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 150 ஆகும்.

அதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 36 தொற்றாளர்களும்,  புத்தளம் மாவட்டத்தில் 35 தொற்றாளர்களும்,  களுத்துறை மாவட்டத்தில் 34 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 13 தொற்ராளர்களும்,  குருணாகலையில் 11 தொற்றாளர்களும்,  யாழில் 7 தொற்றாளர்களும்  இரத்தினபுரியில் 5 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் உள்ளடங்குகின்றனர்.

கேகாலை மற்றும் மொணராகலையில் தலா 4 தொற்றாளர்களும்,  அனுராதபுரம், அம்பாறை, மாத்தளை மாவட்டங்களில் தலா 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  பதுளை, மாத்தறை,  காலி, மட்டக்களப்பு அகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தலா  ஒவ்வொருவர் ஆவர்.

இதனைவிட இதுவரை நாட்டில் மூன்று வெளிநாட்டு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட   45 பேரும், உள் நாட்டில் பல பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 66 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளோரின் பட்டியலில் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

Share.
Leave A Reply

Exit mobile version