“உலகிலேயே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம்தான்” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ருவிற்றரில் பதிவிட்டிருந்தார்.
இலங்கை தீவில் இப்பொழுது நாடாளுமன்றம் இல்லை. மாகாணசபைகள் இல்லை. இருப்பதெல்லாம் உள்ளூராட்சி சபைகள் தான். ஆனால் அவற்றுக்கு கொவிட்-19 இற்குக் கீழான புதிய நிலைமைகளைக் கையாள்வதற்குத் தேவையான அதிகாரங்கள் இல்லை.
குறைந்தபட்சம் ஒரு அவசரகால நடவடிக்கையாக நிவாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கக்கூட அதிகாரம் இல்லை. நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி உண்டு.
அவர் மட்டும்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரால் நியமிக்கப்பட்ட வேறு யாருமே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இல்லை. வேண்டுமானால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லலாம்.
இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சட்டசபைகள் எதுவுமின்றி பெருமளவுக்கு மூன்று ராஜபக்ஷக்களே கொவிட்-19 இற்கு எதிரான நடவடிக்கைகளை படைத்தரப்பின் உதவியோடு நிர்வகித்து வருகிறார்கள்.
இச்சந்திப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஜே.வி.பி. முன்கூட்டியே அறிவித்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியும் முன்கூட்டியே அறிவித்து விட்டது. ரணில் அணி சந்திப்புக்கு முதல்நாள் மாலை நேரத்தில் சந்திப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்தது.
அவர்கள் அவ்வாறு அறிவிக்கும் பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். தத்தமது மாவட்டங்களில் விசேட அனுமதி எடுத்து அவர்கள் அனைவரும் கொழும்புக்குப் பயணமானார்கள்.
கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஆட்சியின் மறைமுகப் பங்காளியாக விளங்கியது. அதனால் அது மஹிந்த அணிக்கு எதிராகக் காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் அந்த அணியை தோற்கடிப்பதிலும் நீதிமன்றத்தில் வழக்குகளில் தோற்கடிப்பதிலும் கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பைச் செலுத்தியது.
மேலும், கூட்டமைப்பின் வருங்காலத் தலைவர் என்று கருதப்படும் சுமந்திரன் நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு பலதடவைகள் அரசாங்கத்தை வற்புறுத்தியிருக்கிறார். ஐரோப்பிய நாடுகளின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி இலத்திரனியல் நாடாளுமன்றத்தைக் கூட்டலாம் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார்.
ஏற்கனவே அவ்வாறு மக்களுக்கு உதவ முற்பட்ட சில உள்ளூராட்சி சபைகளும் தடுக்கப்பட்டன. இவ்வாறு கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளில் தனது வாக்காளர்களுக்கு உதவுவதற்காக கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் ராஜபக்ஷ அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் மகிந்த ராஜபக்ஷ அழைத்தபோது அதில் கூட்டமைப்பும் கலந்துகொள்ளுமா என்ற ஐயம் எழுந்தது. குறிப்பாக கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி அதில் பங்கு கொள்ளாது என்று தெரிய வந்ததும் கூட்டமைப்பும் பின்னடிக்கும் என்றே ஊகிக்கப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க தன்னுடைய முடிவை அறிவித்தபொழுது பெரும்பாலான கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வந்துவிட்டார்கள். மஹிந்தவின் கூட்டத்தில் கலந்துகொள்வதா, இல்லையா என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் காணப்பட்டது.
சம்பந்தரின் கடந்த ஐந்தாண்டுகால அரசியலை வைத்து முடிவெடுக்கும் எவரும் ரணில் பங்குபற்றாத ஒரு கூட்டத்தை அவரும் புறக்கணிப்பார் என்றே ஊகிப்பர். ஆனால் சம்பந்தரோ தான் சிங்களக் கட்சிகளுக்கு விசுவாசமில்லை. சிங்கள, பௌத்த அரசாங்கத்துக்கே விசுவாசம் என்று சிந்திக்கிறாரா?
அவர் அப்படித்தான் கடந்த பத்தாண்டுகளாக முடிவெடுத்து வருகிறார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை பொருட்படுத்தாதபோதும் சம்பந்தர் இன்னும் ஒருபடி கீழே இறங்கிச் சென்று தனது நல்லெண்ணத்தை நிரூபிக்க முற்படுகிறார்.
சிங்கள ஆட்சியாளர்களை பகை நிலைக்குத் தள்ளுவதன் மூலம் ஒரு இறுதித் தீர்வை பெறமுடியாது என்று சம்பந்தர் நம்புகிறார். சிங்கள ஆட்சியாளர்களின் மனதை வென்றெடுப்பதன் மூலமே ஒரு இறுதித் தீர்வை அடையலாம் என்று அவர் இப்போதும் நம்புகிறார்.
அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம் விட்டுக்கொடுப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் நம்புகிறார்.
2009இற்கு முன்னரான தமிழ் அரசியல் எனப்படுவது விட்டுக்கொடுப்பற்றது. வளைந்து கொடுக்காதது. சமரசத்துக்கு தயாரற்றது என்ற ஒரு படிமம் சிங்கள அரசியல்வாதிகளின் மத்தியிலும் சிங்கள பொதுமக்கள் மத்தியிலும் இருந்தது என்றும் அந்தப் படிமத்தை மாற்றி அதற்குத் தலைகீழான ஒரு படிமத்தை ஏற்படுத்தினால்தான் தமிழ் மக்கள் தமக்கு உரிய தீர்வைப் பெறமுடியும் என்றும் சம்பந்தர் நம்புகிறாரா?
அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக அவர் வளையக்கூடிய மட்டும் வளைந்துகொடுக்கிறாரா?
கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எந்த ஆட்சியின் பங்காளியாக இருந்தாரோ அந்த அரசாங்கத்துக்கு
மட்டும் வளைந்து கொடுக்கவில்லை. அதற்கு முன்பிருந்த ராஜபக்ஷவின் முதலாவது ஆட்சியின் போதும் அவர் பெருமளவுக்கு விட்டுக் கொடுத்தார்.
மகிந்த ராஜபக்ஷவுடன் கிட்டத்தட்ட 22 சந்திப்புக்களில் ஈடுபட்டதாகவும் அதில் தமக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றும் அவர் கூறுவதுண்டு. சந்திப்புகளில் மகிந்த ராஜபக்ஷ உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்று தன்னை சந்திப்பவர்களிடம் சம்பந்தர் கூறுவதுண்டு.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ் சுயாதீன குழுவினரிடமும் அவர் அதைச் சொன்னார். அச்சந்திப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதிக்கு அதிகமான நேரம் தனக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பற்றிய விபரங்களை அவர் சொல்வதிலேயே கழிந்தது.
இவ்வாறு தனது முதலாவது ஆட்சியின்போது மகிந்த ராஜபக்ஷ தன்னை அலைகளித்ததாகக் கூறும் சம்பந்தர் இப்பொழுது அவர் அழைத்தபொழுது ஏன் போனார்?
வழமைபோல சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்யும் விமர்சகர்கள் இந்தியாவின் ஆலோசனைப்படிதான் அவர் அப்படி சென்றார் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சம்பந்தர் போய்த்தான் இருப்பார் என்று ஊகிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய கடந்த பத்தாண்டு கால அரசியல் காணப்படுகிறது.
சிங்களத் தலைவர்களை பகை நிலைக்குத் தள்ளினால் தீர்வு கிடைக்காது என்று அவர் திட்டவட்டமாக நம்புகிறார். எனவே சிங்களத் தலைவர்களுக்கு விட்டுக்கொடுத்து இறங்கிச் செல்வதன் மூலம்தான் ஒரு தீர்வைப் பெறலாம் என்றும் நம்புகிறார்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும், “கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின்போது சம்பந்தர் மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். குறிப்பாக ராஜபக்ஷக்களின் முதலாவது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வியூகத்தில் சம்பந்தரும் ஒரு பங்காளி தானே” என்று கேட்கலாம்.
ஆம். அவர் பங்காளி தான். ராஜபக்ஷக்களை விடவும் ரணில் விக்ரமசிங்கவோடு நெருங்கிப் போகலாம் என்று அவர் நம்பினார். அங்கேயும்கூட அவர் ரணிலுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தங்கள் எதையும் கொடுக்கவில்லை.
ஒவ்வொரு நிதி அறிக்கை வாக்கெடுப்பின் போதும் அவர் அரசாங்கத்தை ஆதரித்தார். ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்களின்போதும் அவர் ரணிலை ஆதரித்தார். அவ்வாறு நிபந்தனையின்றி ஆதரிப்பதன் மூலம் ஒரு இறுதித் தீர்வை பெறலாமா என்று அவர் கற்பனை செய்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அவரும் ரணிலும் சேர்ந்து பெற்ற பிள்ளையான நிலைமாறுகால நீதி இப்பொழுது அநாதையாகிவிட்டது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், இனி ராஜபக்ஷக்களுக்கும் இறங்கிச் செல்வது என்று சம்பந்தர் முடிவெடுத்து விட்டாரா?
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இனிமேலும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமல்ல, அதற்குப் பின்னரும்கூட ராஜபக்ஷவின் வம்ச ஆட்சிதான் நீடித்திருக்கும் என்ற ஒரு கணிப்பு நாட்டில் பரவலாகக் காணப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இப்போதைக்கு ஒற்றுமை ஏற்படும் என்று கூறமுடியாதுள்ளது. அதோடு கொவிட்-19இற்கு எதிரான போரில் ராஜபக்ஷக்கள் பெரும்பாலும் வெற்றிபெறக் கூடும் என்ற நம்பிக்கையும் உண்டு.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் அதாவது, வெல்லக்கூடும் என்ற ஓர் அரசியல் சூழலில் இனிவரும் ஐந்தாண்டுகளில் அல்லது அதற்குப் பின்னரும் தமிழ் மக்களுக்கான ஒரு இறுதித் தீர்வுக்காக ராஜபக்ஷக்களுடன்தான் பேசவேண்டியிருக்கும் என்று சம்பந்தர் சிந்திக்கின்றார்.
இந்த அடிப்படையில்தான் அவர் கடந்த திங்கட்கிழமை நடந்த சந்திப்பில் பங்குபற்றினார். அவ்வாறு
சந்தித்ததன் மூலம் இப்பொழுது ராஜபக்ஷக்கள் முன்னெடுத்துவரும் கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒருவித அங்கீகாரத்தை அவர் வழங்கியிருக்கிறார்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கருஜயசூரிய கூறியது போலன்றி நாட்டில் இப்பொழுது நிலவும் ஆட்சிக்குப் பிரதான தமிழ் கட்சி தனது அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது.
சிங்களக் கட்சிகள் வழங்க விருப்பப்படாத ஓர் அங்கீகாரம் அது. அப்படியோர் அங்கீகாரத்தை வழங்கியதன் மூலம் ராஜபக்ஷக்களை வென்றெடுத்துவிடலாமா என்று சம்பந்தர் முயற்சிக்கிறாரா?
அதுமட்டுமல்ல, வேறு ஒரு உப காரணமும் உண்டு. இப்பொழுது ராஜபக்ஷக்களுக்கு உள்ள ஒரே கவலை கொவிட்-19 அல்ல. மாறாக தேர்தலை எப்படியாவது விரைவாக நடத்த வேண்டும் என்பதே.
இப்போது இருப்பது போன்ற தனியாள் இடைவெளிகளைப் பேணவேண்டிய ஒரு நோய்த் தொற்றுக் காலத்தில் தேர்தலை வைத்தால் அதில் இரண்டு தரப்புக்கு அனுகூலம் உண்டு.
அதில், முதலாவது ராஜபக்ஷக்கள், இரண்டாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இப்போது இருக்கும் நோய் தொற்றுச் சூழலில் தேர்தலை வைத்தால் அது அரசாங்கத்துக்குச் சாதகமானது. அதேசமயம் ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் கட்சிகளைவிட கூட்டமைப்புக்கும் சாதகமானது.
ஏனெனில் கூட்டமைப்புக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு. அண்மைய ஆண்டுகளில் அந்த வாக்கு வங்கி அசையத் தொடங்கிவிட்டது. நோய்த்தொற்று காரணமாக ஏனைய கட்சிகளுக்கு போதிய அளவுக்கு பிரசாரம் செய்யவும் சமூகத்தைத் திரட்டவும் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையென்றால் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் பழக்கத்தின் பிரகாரம் வீட்டுக்கே வாக்களிப்பார்கள்.
எனவே ஏனைய கட்சிகளுக்கு பிரசாரத்துக்கு வாய்ப்பைக் கொடுக்காத நோய்த் தொற்றுக் காலத்தை கூட்டமைப்பும் சாதகமாகவே பரிசீலிக்கும்.
இந்த உப காரணத்தையும் சேர்த்துக் கணித்தால் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததன் மூலம் கூட்டமைப்பு அதன் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கான நிகழ்ச்சி நிரலை குறிப்பால் உணர்த்தியுள்ளதா?