இலங்கை அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோத்தாபய அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.பொதுச் சபையில் இருந்து விலகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் போர் வெற்றி விழா உரை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது மறுநாள் இலங்கை அரசின் போர் வெற்றி நாள் என்றும் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் போர் வெற்றி விழாவில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். அவரது எச்சரிக்கை விடும் தொனியிலான உரைகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.
நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி அரசாங்கம் அரசு பல தடைகளை விதித்தது.
எனினும் நாம் தடைகளை முறியடித்து உயிரிழந்த எமது உறவுகளுக்காக அஞ்சலித்தோம். எனினும் தென்னிலங்கையில் முப்படையினரின் பிரசன்னத்துடன் போர் வெற்றி விழாவை தனிநபர் சுகாதாரம் பேணாது (மாஸ்க் அணியாமல்) கொண்டாடியுள்ளார்.
பேர்வெற்றி விழாவில் மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி, பிரதமர், இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் பீல் மார்சல் சரத்பொன்சேகா போன்றவர்கள் மீதே போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் 40 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிட்டது.
இதேபோன்று இன்னுமொரு விசாரணைக்குழு போரில் 70 ஆயிரம் போர் கொல்லப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.
மேலும் ஓ.ஐ.எஸ்.எல். அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் போர்க்குற்றம் நடைபெற்றமைக்கான சாத்தியங்கள் உள்ளன எனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது.
பின்னர் தற்போது ஆட்சிபீடம் ஏறியிருந்த அரசாங்கம் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றமைக்கான சாத்தியங்கள் இருப்பதாலேயே சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக்கு கடந்த அரசு இணை அனுசணை வழங்கியிருந்தது.
இவற்றை மறந்துவிட்டு செயற்படுவதில் பிரியோசனம் இல்லை தமிழ் மக்களையோ சர்வதேசத்தையே மிரட்டி பலனில்லை ஏனெனில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பல வருடங்கள் கடந்த பின்னரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன.
எனவே கோத்தாபய அரசு வீராப்புப் பேசுவதை விடுத்து அவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா. பொதுச் சபையில் இருந்து விலகமுடியுமா என்று இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக அரசிடம் கேட்கின்றேன் என்றார்.