பாகிஸ்தானில் ஓர் இளைஞனுடன் காணப்பட்ட சிறுமிகள் உறவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அச்சிறுமிகளை முத்தமிட்டு வீடியோ படம்பிடித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைபர் பக்துன்கவா மாகாணத்தின் வடக்கு கிழக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் 16, 18 வயதான இரு யுவதிகள் கடந்த வாரம் ஆணவக் கொலையாக சுட்டுக்கொல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
இச்சிறுமிகள் வீதியோரமொன்றில் வைத்து இளைஞன் ஒருவனுடன் காணப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இக்கொலைகள் இடம்பெற்றிருந்தன.
இச்சிறுமிகள் இருவரும் உறவினர்கள் ஆவர். இக்கொலைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்காமை மற்றும் தடயங்களை மறைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் பேரில் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மற்றொரு சிறுமியின் சகோதரன் உட்பட நால்வர் பொலிஸார் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மேற்படி சிறுமிகளை முத்தமிட்டுக்கொண்டு செல்போன் கெமராவில் வீடியோ படம்பிடித்த இளைஞனை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 வயதான உமர் அயாஸ் எனும் இளைஞனே திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அயாஸின் நண்பரான மற்றொரு இளைஞனையும் தாம் கைது செய்துள்ளதாகவும் அந்த இளைஞனின் தொலைபேசியே படம்பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவரே இந்த வீடியோவை மற்றவர்களுடன் பகிர்;ந்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வீடியோ ஒரு வருடத்துக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டதாக பொலிஸாரிடம் அயாஸ் தெரிவிததுள்ளார்.
தான் மேற்படி முத்தக்காட்சிகளை அழித்துவிட்டு தொலைபேசியை நண்பரிடம் திருப்பிக் கொடுத்ததாகவும், ஆனால், அவர் எப்படியோ வீடியோக்களை மீளப் பெற்று பகிரச் செய்துள்ளார் எனவும் உமர் அயாஸ் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி எனக் கூறப்படும் மொஹம்மத் அஸ்லம் எனும் இனைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் மொஹம்மத் அஸ்லம் கராச்சி நகரில் வசித்தவர் எனவும், மேற்படி சிறுமிகளையும் உமர் அயாஸையும் கொல்வதற்காக அவர் வடக்கு வஸிரிஸ்தானுக்கு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.