இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்த 1027 தொற்றாளர்களில், 585 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த கடற்படை வீரர்களுடன் சேர்த்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 597 பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் இன்று மட்டும் 15 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அந்த 15 பேரில் 12 பேர் கடற்படை வீரர்களாவர். அதன்படி இதுவரை 584 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களில் 221 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாணடர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 434  தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய்தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 112 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, இலங்கையில் கடந்த 20 நாட்களுக்குள் சமூகத்தில் இருந்து எந்த தொற்றாளரும் கண்டறியப்படவில்லை எனவும், இது ஒரு ஆரோக்கியமான நிலைமை எனவும் சுகாதார அமைச்சின் பொது மக்கள் சுகாதாரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தொற்றுநோய் தடுப்பு குறித்த விஷேட வைத்திய நிபுணர்  தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இயங்கு நிலையில் உள்ள கடர்படை கொரோனா கொத்தணி பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version