குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கவாசாகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நோய் ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேற்கத்தேய நாடுகளில் வேகமாக ஏற்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் குறித்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இங்கும் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

மனித உடலில் குருதியைக்கொண்டு செல்லும் நாடியில் காணப்படும் அழற்சியினால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோய் நடுத்தர அளவுள்ள நாடிகளை தாக்குகின்றது. அதனால் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாடிகளில் வீக்கம் ஏற்படும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.

இதுவொரு தன்னுடல் தாக்கும் நோய் என்பதோடு குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் ஆபத்து உள்ளது. பொதுவாக இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல் ஏற்படும். பின்னர் நாக்கு சிவந்து ஸ்ட்ராபெரி போன்று தோற்றமளித்தல், தோலில் ஏற்படும் சிவப்பு நிறமான பருக்கள், தோல் உரிதல், உதடு மற்றும் கண் ஆகியன சிவப்பு நிறமாகி வீக்கமடைதல் அத்துடன் கழுத்தில் ஒரு வகை சொறி போன்று உருவாகுதல் போன்றவையாகும்.

குறிப்பாக இந்த நோய் 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளையே பெரும்பாலும் பாதிக்கின்றது. எனவே இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுவர் வைத்தியர் நிபுணரிடம் ஆலோசனையைப் பெறவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version