யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது , இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை நாடு புதிய விதிப்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதேபோல செவ்வாய்க்கிழமை தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு  இடையிலான போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய விடயங்களை செயற்படுத்துவதற்காக தீர்மானித்துள்ளோம்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உள்ளூர் போக்குவரத்து சற்று அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதோடு அவை தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றதா என அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.

தனியார் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிகள் பயணம் செய்வது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே இது தொடர்பில் நாங்கள் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன் பேச உள்ளோம்.

யாழ் மாவட்டத்தில் உள்ளூர் பேருந்து சேவையை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டத்தினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

காற்றின் தாக்கத்தின் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் தீவகத்துக்கான போக்குவரத்து சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறது. அத்தோடு ஆலயங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என நாங்கள் அறிவித்துள்ளோம்.

அதிலும் மத வழிபாட்டுத் தலங்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version