யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள் , மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன் , குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.
அதேவேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வயர்கள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் போலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வெடிபொருள் மிதிவெடியாக இருக்கலாம் எனவும் , சட்டவிரோத மண் அகழ்வோர் பொலிசாரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.