அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார்.

 

அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இதன்படி 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் சம்பாதித்த பரிசுத்தொகை, ஊதியம், போனஸ், போட்டிக்கட்டணம், விளம்பர ஒப்பந்த வருமானம், காப்புரிமைத் தொகை ஆகியவற்றை மதிப்பிட்டு உலக அளவில் கடந்த ஓராண்டில் அதிக வருவாய் ஈட்டிய வீரர், வீராங்கனைகளின் முதல் 100 பேர் பட்டியலை தயாரித்து தற்போது வெளியிட்டுள்ளது.

எப்போதும் போல கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கோல்ப், குத்துச்சண்டை, கார்பந்தய வீரர்களே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

கால்பந்து நட்சத்திரங்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’அரியணையில் ஏறியுள்ளார்.

அவர் ஓராண்டில் குவித்த தொகை ரூ.802 கோடி. இதில் பரிசுத்தொகை ரூ.48 கோடியாகவும், விளம்பர ஒப்பந்த தொகை ரூ.754 கோடி அளவிலும் உள்ளது.

38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. ஆனாலும் விளம்பர ஒப்பந்தம் மூலம் அவருக்கு பணமழை கொட்டுகிறது.

குறிப்பாக ஜப்பான் ஆடை தயாரிப்பு நிறுவனமான யுனிக்லோ 10 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் பெடரருடன் ரூ.2,265 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த வகையில் மட்டும் பெடரருக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் கிடைக்கிறது.

இந்த ஒப்பந்தம்தான் அவருக்கு ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ‘போர்ப்ஸ்’ 30 ஆண்டுகளாக இத்தகைய பட்டியலை வெளியிடுகிறது. இதில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒருவர் முதலிடம் பெற்றிருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

2-வது இடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரரும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார்.

அவரது ஓராண்டு சம்பாத்தியம் ரூ.792 கோடியாகும். போட்டியில் பங்கேற்பதற்காக அவர் பெற்ற ஊதியம் மற்றும் பரிசு மட்டும் ரூ.452 கோடியாகும்.

கொரோனா பாதிப்பால் கால்பந்து வீரர்களின் ஊதியம் இந்த சீசனில் சற்று குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ரூ.784 கோடியுடன் 3-வது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.720 கோடியுடன் 4-வது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் ரூ.666 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் வீராங்கனைகளில் 2 பேர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்கள். டென்னிஸ் பிரபலங்களான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ரூ.282 கோடியுடன் 29-வது இடத்திலும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரூ.272 கோடியுடன் 33-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ரூ.336 கோடி தொகையுடன் 23-வது இடத்தில் இருக்கிறார்.

இந்த பணக்கார விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பில், கிரிக்கெட்டில் இருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, இந்திய கேப்டன் விராட் கோலிதான். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி 66-வது இடம் வகிக்கிறார்.

‘போர்ப்ஸ்’ இதழ் கணக்கீட்டின்படி ஒரு ஆண்டில் அவர் ஈட்டிய வருமானம் ரூ.196 கோடியாகும். இதில் பரிசு மற்றும் சம்பளம் மூலம் ரூ.15 கோடியும், விளம்பர ஒப்பந்த வாயிலாக ரூ.181 கோடியும் குவித்து இருக்கிறார்.

31 வயதான விராட் கோலி இந்த பட்டியலில் 2018-ம் ஆண்டில் 83-வது இடத்திலும், 2019-ம் ஆண்டில் 100-வது இடத்திலும் இருந்தார். இப்போது மேலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version