அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்து வைத்திருந்ததில், அவர் உயிரிழந்தார்.

தன்னால் மூச்செடுக்க முடியவில்லையென அவர் இறைஞ்சிய போதும், வெள்ளையின பொலிஸ்காரன் இரங்கவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டது.

இந்நிலையில் ஜோர்ஜ் ஃபிளொய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவை உலுப்பி, அங்கு பெரும் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜோர்ஜ் ஃபிளொய்ட் மரணத்துக்கு மன்னிப்பு கோரி மியாமி பொலிஸார் போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்டனர். மேலும் போராட்டக்காரர்களைக் கட்டித் தழுவியும் ஆறுதல் கூறினர்.

ஜோர்ஜ் ஃபிளொய்ட் மரணத்துக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் அதிகாரியின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மியாமி பொலிஸாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.

மியாமி மட்டுமல்ல, அமெரிக்காவின் பல பகுதிகளிலும், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கொலைக்கு மன்னிப்பு கோரும் செய்கையை வெளிப்படுத்தினர்.

ஹொஸ்டன் பொலிஸ் அதிகாரி போராட்டக்காரர்களின் தோள்களில் அணைத்து தனது வருத்தத்தை தெரிவித்தார். நீதிக்கான அமைதியான போராட்டத்தில் தானும் பங்களிப்பதாக தெரிவித்தார்.

மிச்சிகனில் உள்ள பிளின்ட் டவுன்ஷிப்பில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தபோது, ​​ஜெனீசி கவுண்டியின் ஷெரிப் கிறிஸ் ஸ்வான்சன், ஹெல்மெட்டை கழற்றி விட்டு, கூட்டத்தில் உரையாற்றினார்.

“நாங்கள் நிஜமாக இருக்க விரும்புகிறோம். நான் இதை ஒரு அணிவகுப்பாக மாற்ற விரும்புகிறேன், ஒரு எதிர்ப்பாக அல்ல. … நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?“ என கேட்டார். “எங்களுடன் நடவுங்கள்“ என கூட்டம் கேசமெழுப்ப, அவரும் அணிவகுப்பில் சேர்ந்து நடந்தார்.

கலிபோர்னியாவின் மத்திய கடற்கரையோரம் உள்ள சாண்டா குரூஸில் உள்ள பசிபிக் அவென்யூவில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் கூடிவந்தபோது, ​​காவல்துறைத் தலைவர் ஆண்டி மில்ஸ், மேயர் ஜஸ்டின் கம்மிங்ஸுடன் இணைந்து முழங்காலில் மண்டியட்டார்.

எதிர்ப்பாளர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், “கறுப்பின மக்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை குறித்து கவனத்தை ஈர்க்கவும்” மில்ஸ் மண்டியிட்டார் என்று காவல் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பல நகரங்களிலும் பொலிசாரும், பாதுகாப்பு தரப்பினரும் மண்டியிட்ட சம்பவங்கள் பதிவாகியது.


Share.
Leave A Reply

Exit mobile version