வீடொன்றில் பணியாற்றிய 8 வயதான சிறுமி, கூட்டிலிருந்த கிளிகளை அறியாத்தனமாக சுதந்திரமாக பறக்கவிட்டதால் எஜமானியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இச்சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஸஹ்ரா ஷா அல்லது ஸொஹ்ரா ஷா (Zohra Shah) எனும் இச்சிறுமி, ராவல்பிண்டி நகரிலுள்ள வீடொன்றில் ஊழியராக பணியறாற்றிவந்தாள்.
குடந்த ஞாயிற்றக்கிழமை படுகாயமடைந்த நிலையில், பேகம் அக்தர் ருக்ஷானா ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அவள் பணியாற்றிய குடும்பத் தலைவரான ஹசன் சித்தீக்கியினால் அழைத்து வரப்பட்டாள். எனினும் விரைவிலேயே அச்சிறுமி உயிரிழந்துவிட்டாள்.
தமது வீட்டிலிருந்த விலை உயர்ந்த கிளிகளை சிறுமி ஸஹ்ரா கூட்டியலிருந்து சுதந்திரமாக பறக்கவிட்டதால் அவளை தனது மனைவி தாக்கியதாக ஹசன் சித்தீக்கி ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி ஸாரா இறந்ததையடுத்து, அவளின் எஜமானர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஜுன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார அதிகாரியினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்படி, இச்சிறுமியின் முகம், கைகள், விலா எலும்புத் தொகுதிக்கு கீழான பகுதி, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.
பஞ்சாப் மாநிலத்தின் கோட் அடூ நகரைச் சேர்ந்த இச்சிறுமி 4 மாதங்களுக்கு முன்னர் ராவல்பிண்டியிலுள்ள மேற்படி குடும்பத்தினரால் வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்டடுள்ளாள் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.
இச்சிறுமியின் மரணம், பாகிஸ்தானின் சிறுவர் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சிறுவர்கள் மீதான சுரண்டல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
பாகிஸ்தான் மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஷ்ரீன் மஸாரி இது தொடர்பாக தெரிவிக்கையில், மேற்படி சம்பவம் குறித்து தனது அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அமைச்சின் சட்டத்தரணி இவ்வழக்கை அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீட்டுப்பணியாளர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸஹ்ராவுக்கு நீதி கோரி #JusticeForZohraShah எனும் ஹேஷ்டெக் சகிதம் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் உட்பட பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.