கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலமானார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தான். தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் அவர் இருந்தார்.

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் மூச்சுத் திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அன்பழகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கும் வகையில் வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனா பாதிப்பு இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் அவரை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன.

பிபிசி தமிழிடம் வியாழனன்று பேசிய திமுக நிர்வாகி ஒருவர், ”அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளது. அதோடு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது குடும்பத்தார் அவரை சந்திப்பதற்குக் கூட அதிக கட்டுப்பாடுகள் இருப்பதால், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அவரை நலம் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எங்களுக்கு இது வருத்தமான காலம்,” என்றார்.

யார் இந்த அன்பழகன்?

திமுகவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஜெ.அன்பழகன். ஃபேஸ்புக், ட்விட்டர் என தனது கருத்துகளை உடனடியாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தவர்.

2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.

படத்தின் காப்புரிமை J Anbazhagan Mla / Facebook

அவர் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2001 தேர்தலில், தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் சுலோச்சனா சம்பத்தை 2,499 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நேரத்தில், கடந்த மார்ச் மாத இறுதியில், நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

அத்துடன் அவரது ஒரு மாத சம்பளமான ரூ.1,05,000-ஐ தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்

திமுக எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதியாக மட்டுமல்லாது தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.

2013ல் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், ”யாருடா மகேஷ்” என்ற படத்திற்கு விநியோகஸ்தராகவும் அன்பழகன் இருந்துள்ளார்.

2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.

அப்போது அந்தப் படத்தின் குழுவினர் விரும்பினால் தனது ‘அன்பு பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தார் அன்பழகன்.

பிற செய்திகள்:

Share.
Leave A Reply

Exit mobile version