உயிர்த்த ஞாயிறு  தின குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானின், சகோதரான  சாய்ந்தமருது வீட்டில் குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலைச் செய்துகொண்ட மொஹம்மட்  ரில்வான், கடந்த 2018 ஆம் ஆண்டு குண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் படு காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அதற்காக பொய்யான தகவல்களை வழங்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அது குறித்து பொய்யான தகவல்களை  வழங்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2018 ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ள ரில்வான் தொடர்பில், அவரை பரிசோதித்த வைத்தியர் ஒருவர், இரு தாதியர் இன்று  சாட்சியம் வழங்கினர்.

இதன்போது ரில்வானின் புகைப்படத்தை பார்த்து, தான் இவரைப் போன்ற ஒருவரை குறித்த தினம் பரிசோதித்தமையை வைத்தியர் அடையாளம் காட்டியதுடன் தாதியருக்கு உருவ அமைப்பு தொடர்பில் ஞாபகமில்லை என கூறிய போதும்,  ஏனைய தகவல்களை சாட்சியமாக வழங்கினர்.

ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

இதன்போது நேற்று இரவு,  கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  திடீர் விபத்து பிரிவின் வெளி நோயாளர் பகுதியில் கடமையாற்றும் வைத்தியர் சந்தன,  அப்பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவர், 79 ஆம் சிகிச்சை அறைக்கு பொறுப்பான இந்திகா சமன்மலி அரம்பகே எனும் தலைமை தாதி ஆகியோர் சாட்சியமளித்தனர்.  அந்த சாட்சியங்கள் மூன்றினதும் சுருக்கம் வருமாறு ,

கடந்த 2018 ஆகஸ்ட் 27 ஆம் திகதி  முற்பகல் 10.43 மணிக்கு எம்.ஐ. சாஹித் எனும் பெயரில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார். முகம், கை, தலை பகுதியில் காயங்கள் இருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள அந்த நோயாளியை வைத்தியர் சந்தனவும் அவருடன் இருந்த தாதியர்களுமே பரிசோதித்துள்ளனர்.

நோயாளி பேச முடியாமல் இருந்ததாகவும் அதன்போது அவருடன் வந்த நன்றாக சிங்களம் கதைக்கக் கூடிய ஒரு இளைஞர், நோயாளியின் பெயர் எம்.ஐ. சாஹித் எனவும் கூறியுள்ளதாக சாட்சியாளர்கள் தெரிவித்தனர்.

நோயாளியுடன் மேலும் மூவர் வந்திருந்த போதும் அவர்கள்  உள் நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை எனவும்  அவருடன் அருகில் இருந்த இளைஞர் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், அவருடன் தான் கதைத்ததாகவும் வெளி நோயாளர் பிரிவின் தாதி  சாட்சியத்தின் போது சுட்டிக்காட்டினார்.

குறித்த நோயாளி பிளாஸ்டிக் பாயில்  படுக்க வைக்கப்பட்டு ட்ரொலியில் ஏற்றப்பட்டிருந்ததாக கூறிய அவர், எவ்வாறு அவருக்கு காயம் ஏற்பட்டது என தான் கூட இருந்தவரிடம் விசாரித்ததாக தெரிவித்தார்.

அப்போது, தாங்கள் தங்க நகை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எனவும், நகை செய்துகொண்டிருந்த போது, கேஸ் சிலிண்டர் வெடித்து இக்காயங்கள் ஏற்பட்டதாக நோயாளருடன் இருந்த நபர் தெரிவித்ததாக குறித்த தாதி சுட்டிக்காட்டினார்.

அவர் கூறும் காரணங்கள் பொய் எனவும்,  பல மணி நேரங்களுக்கு முன்னரேயே குறித்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையும் காயங்களை அவதானிக்கும் போது தனக்கு தோன்றியதாக  சாட்சியமளித்த தாதி, அதனாலேயே அச்சம்பவம் தனது ஞாபகத்தில்  உள்ளதாகவும் கூறினார்.

‘இதனை தொடர்ந்து நான் வைத்தியர் சந்தனவிடம் இவர்கள் பொய் கூறுகின்றனர். காயங்களுக்கும் காரணங்களுக்கும் தொடர்பில்லை என கூறினேன்.   அப்போது உடன் இருந்த நபரை திடீர் விபத்து பிரிவின் முன்னால் உள்ள பொலிஸ் காவலரனுக்கு அனுப்பி வைத்தோம்.  அவர்கள் கூறும் காரணம் பொய்யென தெரிந்ததால் அப்படி அவரை பொலிஸ் காவலரணுக்கு அனுப்பினோம்.

அதனால் அவர் என்னுடன் கோபத்தில் அதன் பின்னர் பெரிதாக பேசவே இல்லை. நோயாளியின்  கைவிரல்கள்,  நெற்றிப் பகுதி, கண் போன்றவை பாதிக்கப்பட்டிருந்ததாக ஞாபகம் உள்ளது.’ என அந்த தாதி சாட்சியமளித்தார்.

இதன்போது அடையாளத்தை உறுதி செய்ய தேசிய அடையாள அட்டைகளை பரிசீலிக்க மாட்டீர்களா, வைத்தியசாலை பொலிஸார்  நோயாளியை வந்து பார்க்கமாட்டார்களா என  ஆணைக் குழு கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த குறித்த தாதி,

‘உண்மையில் அப்போது அடையள அட்டைகளை  பரீட்சிக்கும் நடைமுறை இருக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தின தககுதலின் பின்னர் இப்போது அடியாள அட்டையையும் பார்க்கின்றோம்.

பொலிஸாருக்கு அறிவித்தால் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் வந்து பார்ப்பார்கள். பல சந்தர்ப்பங்களில் வரவே மாட்டார்கள். இந்த விடய்த்தில் கூட அவர்கள் வந்து பார்த்ததாக ஞாபகத்தில் இல்லை. ‘ என்றார்.

இதன்போது  தேசிய வைத்தியசாலையின் உடற் கூற்று வைத்தியராக கடமையாற்றும்  மொஹம்மட் சுபியான் மொஹம்மட் சப்ராச் என்பவர்  குறித்த நோயாளியைப் பார்க்க வந்தாரா என ஆணைக் குழு கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த அந்த தாதி, அவ்வாறு  தமக்கு  ஞாபகம் இல்லை எனவும்,  நோயாளரை பொறுப்பேற்ற பின்னர் உரிய சிகிச்சை அறைக்கு அவர் மாற்றப்படுவார் எனவும் அதற்கு அப்பால் தான் அந்த நோயாளரைப் பார்வை இடவோ அவர் சாந்த நடவடிக்கைகளை செய்யவோ சந்தர்ப்பம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இந்த சிகிச்சையளிப்பின் போது,  எம்.ஐ.சாஹித் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட நோயாளி  சஹ்ரானின் சகோதரர் மொஹம்மட் ரில்வான் என விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது புகைப்படத்தை காட்டிய போது,  திடீர் விபத்து பிரிவின் வெளிநோயாளி பிரிவு வைத்தியர் சந்தன அடையளம் காட்டினார்.

எனினும் தாதியர்கள் தமக்கு ஞாபகம் இல்லை என தெரிவித்தனர்.  அத்துடன் ரில்வான் சிகிச்சைப் பெறும் போது அவருக்கு உதவியாக  வைத்தியசாலையில் தங்கியிருந்த இளைஞர்  சாஹித் அப்துல்லாஹ் எனும் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படும் போதும்,  அவரது புகைப்படத்தை இன்று சாட்சியாளர்கள் அடையாளம் காட்டவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version