ஆறு புதிய உள்நாட்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்புகள் பதிவாகிய பின்னர் சீனாவின் பெய்ஜிங்கில் சில பகுதிகளுக்கு முடக்கநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பெய்ஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது.

கடந்த ஜுன் 9ஆம் திகதி பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் வீடு திரும்பிய பின்னர், அங்கு இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு மீண்டும் வைரஸ் தொற்று பரவியுள்ளமையானது, அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடசாலைகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட முடிவை அந்நகர அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.

சீன தலைநகரில் உள்நாட்டில் பரவிய மேலும் ஆறு கொரோனா பாதிப்புகளை தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் நகரத்தில் உள்ள பெரிய மொத்த சந்தையை தற்காலிகமாக மூடினர்.

பெய்ஜிங்கில்; புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் தெற்கு பெய்ஜிங்கின் ஃபெங்டாய்யில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். இதனைத் தொடர்ந்து, உணவு சந்தையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச விமானங்கள் பெய்ஜிங்கில் தரையிறங்காமல் இருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த விமானங்கள் அனைத்தும் மற்ற நகரங்களுக்குத் திசை திருப்பப்படும்.

தற்போது கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பெய்ஜிங்கிற்கு வெளியே பயணம் மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version