தம்புள்ளை – இஹல எரேவுல்ல பகுதியில் டயருடன் எரிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல எரேவுல்ல பகுதியின் கிராம சேவகரால் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தம்புள்ளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமையவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது இஹல எரேவுல்ல பகுதியில் மஹகோன குளத்திற்கருகில் காணப்பட்ட மூங்கில் மரங்கள் நிறைந்த வனப்பகுதியில், விவசாயத்திற்காக நீர் சேமித்து வைப்பதற்கு பயன்படும் ஐந்து அடி ஆழமான கிணறு ஒன்று காணப்படுகின்றது. இந்த கிணற்றுக்குள் எரிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புகளுக்கு ஒப்பான எலும்புகள் தீப்பிடித்துள்ள நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் தம்புள்ளை சட்ட வைத்தியர், மாத்தளை குற்றவியல் ஸ்தலப்பரிசோதகர்கள், மோப்பநாய் பொலிஸ் பிரிவினர் மற்றும் கைரேகை பரிசோதனை பிரிவினர் ஆகியோரின் உதவியுடன் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் , இதன்போது மனித எழும்புகளே இவ்வாறு டயர் இட்டு எரிக்கப்பட்டுள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்தை சோதனைக்குட்படுத்தியதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மண்வெட்டி ஒன்றும் , வெற்று மதுபான போத்தல்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தம்புள்ளை நீதவான் நீதி மன்றத்திற்கு அறிவித்துள்ளதுடன் , பின்னர் நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பரிசோதனைகளையும் முன்னெடுத்துள்ளார்.
குறித்த மனித எலும்புகள் யாருடையது என்று இன்னும் கண்டறியப்பட வில்லை. சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்காத நிலையில் தம்புள்ளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.