திருமண நிகழ்ச்சி மூலம் 15 பேருக்கு கொரோனா பரவவும், வைரசால் ஒருவர் உயிரிழக்கவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தைக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பல கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு 50-க்கும் அதிகமானவர்களை அழைத்து அதில் 15 பேருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்த மணமகனின் தந்தைக்கு 6 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிஹீல்வாடா மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் தனது மகனுக்கு கடந்த 13 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளார்.

அந்த திருமண நிகழ்ச்சியில் ஊரடங்கு விதிகளை மீறி 50-க்கும் அதிகமானோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறி அதிக நபர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தைக்கு பிஹீல்வாடா மாவட்ட ஆட்சியர் 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version