யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணொருவர் வாள்வீச்சிற்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார்.

தனேஸ்குமார் ஜனனி என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு வாள்வீச்சிற்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் வாள்வீச்சினை மேற்கொண்ட நபர் ஏற்கனவே ஒரு பெண்ணினைத் தாக்கி அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அந்த சம்பவத்தினை குறித்த பெண் நேரடியாகக் கண்டுள்ளமையால் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டாம் என வாள்வீச்சு மேற்கொண்டவரால் மிரட்டப்பட்டு வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பெண்ணின் 15 வயது மகனும் அவரது நண்பரும் வீட்டில் இருந்த வேளை போதையில் வந்த அந்த நபர் மகனை இழுத்துச் சென்று தனது வீட்டின் முன்னால் உள்ள மரத்தோடு கட்டி வைத்துத் தாக்கினார்.

இதனையறிந்த தாயார் அவ்விடத்திற்கு வந்து ஏன் எனது மகனைத் தாக்குகின்றீர்கள் எனக் கேட்டபோது அவரினையும் சரமாரியாகத் தாக்கினார் இதனால் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்துள்ளார் அதன் பின்னரும் அவரைத் தாக்கினார்.

அதே நேரம் கட்டப்பட்டிருந்த மகனை வேறொருவர் அவிழ்த்து விட்டபோது அவன் அருகில் இருந்த கட்டை ஒன்றினால் அவரைத் தாக்கினான். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்ற நபர் வாள் ஒன்றினை எடுத்து வந்து அந்தப் பெண்மீது வீசினார்.

வாள் வெட்டிற்கு இலக்காகிய பெண் அருகில் உள்ள வீடு ஒன்றினுள் ஓடினார். குறித்த நபர் பின்தொடர்ந்து துரத்திச் சென்று பல தடவைகள் வாளினால் சரமாரியாகத் தாக்கிய பின்னர் அவரது தலைமுடியை அறுத்து வீசினார். மறிப்பதற்கு சென்ற அந்த வீட்டுப் பெண்மீதும் வாள்வீசினார் இருப்பினும் அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை. அதன் பின் வெளியில் நின்றவர்களையும் வாள் கொண்டு துரத்தினார்.

படுகாயமடைந்த குறித்த பெண்ணை ஆட்டோவில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றவேளை பொலிஸார் அவரை அம்புலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே நபர் சில வாரங்களுக்கு முன்பும் தனது 15 வயது மகன் மீது தாக்குதல் செய்ததாகவும் இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றவேளை பொலிஸார் முறைப்பாடு எடுக்காமல் அவருடன் பேசுவதாக கூறித் திருப்பி அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறுகின்றார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் தற்பபோதைய செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் சாட்சி சொல்லவிருக்கும் பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கும் வாள்வீச்சினை மேற்கொண்ட நபர் நேரடியாக உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சாட்சியமளிக்கவிருக்கும் பெண் கூறுகின்றார். அதனால் தாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நபர் மீது பல வழக்குகள் பதிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version