திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான ஆணையை கோரி வருகிறது.
வடக்கினதும், தெற்கினதும் இன்றைய பிரதான அரசியல் கோசமாக, புதிய அரசியலமைப்பு மாறியிருக்கிறது.
ஆனால் இரா.சம்பந்தன் கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும், மகிந்த ராஜபக்ச கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும் ஒரே மாதிரியானவை அல்ல.
அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கக் கூடிய, தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கக் கூடிய நீதியான, நியாயமான ஒரு தீர்வை வழங்கும் அரசியலமைப்பு உருவாக்கத்தையே எதிர்பார்க்கிறார் இரா.சம்பந்தன்.
முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து அத்தகைய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்து போயின.
கடந்தமுறை இருந்ததை விட முற்றிலும் வித்தியாசமான ஒரு சூழல் நிலவுகின்ற இந்த தருணத்திலும் அவர் தனது அரசியலமைப்பு மாற்ற கோசத்தைக் கைவிடவில்லை.
அதேவேளை, மகிந்த ராஜபக்அரசாங்கத்தின் முதல் இலக்காக இருப்பதும், அரசியலமைப்பு மாற்றம் தான்.
அவர்களுக்கு, 19 அவது திருத்தச்சட்டம் பெரும் இடையூறாக இருக்கிறது. அதனை எப்படியாவது அரசியலமைப்பில் இருந்து பிடுங்கி எறிவதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள்.
அதனை செய்தால் தான், ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஆட்சி அதிகாரத்தில் காணப்படும் சில தடைகளை அகற்ற முடியும்.
அதற்கேற்ற வகையிலான, அரசியலமைப்பு மாற்றத்தையே அவர்கள் இப்போது இலக்காக வைத்திருக்கிறார்கள். அவர்களின் இந்த இலக்கையே இரா.சம்பந்தன் சாதகமான ஒன்றாக கருதுகிறார் போலும்.
அதாவது, யார் வென்றாலும், அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தொடங்கப்படும், அத்தகைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான நிலையில் இருந்தால் தான், பேரம் பேச முடியும் என்று அவர் எதிர்பார்க்கிறார். 20 ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது இந்த பேரம் பேசலுக்காகத் தான்.
கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெறுவதென்பது குதிரைக் கொம்பான விடயம். கடந்த முறை பெற்ற ஆசனங்களைத் தக்க வைத்துக் கொண்டாலே பெரிய சாதனையாகத் தான் இருக்கும்.
இவ்வாறான நிலையில், இரா.சம்பந்தன் எதிர்பார்ப்பது போன்று, பேரம் பேசல் நடப்பதற்கு, கூட்டமைப்பு பலமாக இருந்தால் மட்டும் போதாது, பேரம் பேசுவதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பும் தயாராக இருக்க வேண்டும்.
ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தரப்பு இந்தமுறை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கே மக்களின் ஆணையைக் கோருகிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவது கடினம்.
இந்த தேர்தல் முறை நடைமுறைக்கு வந்த பின்னர் எந்தவொரு அரசாங்கமும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தேர்தலின் மூலம் பெறவில்லை.
விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் நடந்த தேர்தலில் கூட, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு 144 ஆசனங்கள் தான் கிடைத்தன.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு பொதுத் தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டியிருக்கும். ஆனால், அது தற்போதைய அரசாங்கத்தினால் சாத்தியமான என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால், ஜனாதிபதி தேர்தலில் கூட 52 சதவீத வாக்குகள் தான் கோத்தாபய ராஜபக்சவுக்கு கிடைத்திருந்தது. அதைவிடப் பெரிய “அலை” ஒன்று “மொட்டு” மீது வீசுவதாகத் தெரியவில்லை.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று பொதுஜன பெரமுனவினர் நம்புகிறார்களோ இல்லையோ, கிடைக்கும் என்றே கூறிக் கொள்கிறார்கள்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிட்டாது போனால், ராஜபக்சவினரின் அரசியலமைப்பு திருத்தக் கனவு புதைக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
அவர்கள் அதற்காக வேறு வழிகளை கையாள முனைவார்கள். கட்சிகளை உடைத்து,எம்.பிக்களை தம் பக்கம் கவர முனைவார்கள். அல்லது ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சி செய்வார்கள்.
இவ்வாறான ஒரு சூழலைத் தான் இரா.சம்பந்தன் எதிர்பார்த்திருக்கிறார் போலத் தெரிகிறது. ஆனால் அது அவருக்கோ, கூட்டமைப்புக்கோ பேரம் பேசும் வாய்ப்பைக் கொடுக்குமா என்பது தான் சிக்கல்.
ஏனென்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும், சரி, தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு மகிந்த அரசாங்கம் முன்வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
அண்மையில் மகிந்த ராஜபக்ச சலூன் கதவை அகற்றி விட்டு, இரும்புக் கதவு போடுவதற்கு மக்களின் ஆணையைக் கேட்டிருந்தார். அவர் சலூன் கதவு என்று கூறியது, தமது அரசாங்கத்துக்குள் அவ்வப்போது வேறு கட்சிகள் வந்து போவதைத் தான்.
அவ்வாறில்லாமல், ஒரு நிரந்தரமான அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையைத் தான் அவர் கோரியிருக்கிறார்.
அது கிடைக்காமல் போனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அவர் வேறு கட்சிகளின் தயவை நாட வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் அதற்கு மகிந்தவின் கூட்டாளிகள் இடமளிப்பார்களா என்பது சந்தேகம் தான்.
எந்தவொரு சூழ்நிலையிலும் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத கட்சிகளின் ஆதரவை பொதுஜன பெரமுன, பெறப் போவதில்லை என்று நாமல் ராஜபக்ச திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் 20 ஆசனங்களைக் கைப்பற்றினாலும் கூட, இரா.சம்பந்தனோ அல்லது வேறெந்த தமிழ் அரசியல் தலைவர்களோ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்கான சூழல் வாய்க்கப் போவதில்லை.
பிரபாகரனால் ஆயுதப் போராட்டத்தினால் பெற முடியாது போனதை, சம்பந்தன், அரசியலமைப்பு மூலம் பெற முனைகிறார் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற ஆளும்தரப்பினர் முன்னர் விமர்சித்து வந்தனர்.
அவ்வாறானவர்கள் கோலோச்சக் கூடிய ஒரு அரசாங்கம், இரா.சம்பந்தனுடன் பேரம் பேசுவதற்கு இணங்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு கிடைக்குமா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில், மாற்றுத் தெரிவுகளைத் தான், தேடுவதற்கு முனைவார்கள்.
ஏனென்றால், தமிழ், முஸ்லிம் கட்சிகளை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதை மகிந்த ராஜபக்சவோ அவரது கட்சியினரோ விரும்பவில்லை. அது சிங்களப் பெருந்தேசியவாத அரசாங்கம் என்ற விம்பத்தை உடைத்து விடும் என்பது ராஜபக்சவினருக்குத் தெரியும்.
இப்போதைக்கு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தான், பொதுஜன பெரமுனவின் பலம். அதனை வைத்தே தேர்தல்களில் வெற்றி பெற நினைக்கிறது.
கூட்டமைப்புடனோ, முஸ்லிம் கட்சிகளுடனோ இறங்கிப் போகும் நிலைக்கு வந்தால், அந்தப் பலத்தை அவர்கள் இழந்து விடுவார்கள். எனவே, தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் நெருங்காமல்- விலகி இருக்கவே ராஜபக்சவினர் நினைப்பார்கள்.
அரசியலமைப்பு மாற்றம் அவர்களுக்கு முக்கியமானதாயினும், சிங்கள பௌத்த வாக்குகள் அவர்களுக்கு அதைவிட முக்கியமானது. ஏனென்றால், அவர்கள் அதன் மீது தான் தமது பலத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.
-கார்வண்ணன்