கொலை, கொள்ளை, கப்பம் கோரல் உள்ளிட்ட பல திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில்  பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, பிரபல பாதாள உலகத் தலைவன்  அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சமிந்த பெரேரா, இந்தியாவில்  நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலின் உண்மைத் தன்மையை அறிவியல் ரீதியாக  உறுதி செய்துகொள்ள விசேட விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

 

‘ அங்கொட லொக்கா உயிரிழந்தமை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை.

அவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படுமிடத்து அது தொடர்பில், அவருக்கு எதிரான நீதிமன்றங்களுக்கு அதனை அறிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

சில நேரம் அவர் அவரது உருவத்தை மாற்றி மீள இலங்கைக்கு வந்து குற்றங்களில் ஈடுபடவோ, அல்லது  வெளிநாடு ஒன்றுக்கு  பாதுகாப்பாக சென்று மறைந்திருக்கவோ கூட,  தான் மரணித்து விட்டதாக நம்பவைக்க நாடகம் ஆடுகின்றாரோ என்ற சந்தேகமும் உள்ளது.

அது குறித்தும் அவதானம் செலுத்தி  சிறப்பு விசாரணை செய்கின்றோம்.’ என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

மிரிஹானையில் உள்ள மேல் மாகாண தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கேசரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்தார்.

அங்கொட லொக்கா உண்மையிலேயே கொலை  செய்யப்பட்டுள்ளாரா அவர் உயிரிழந்துவிட்டாரா என்பதை அறிவியல் ரீதியில் ஆதாரபூர்வமாக உறுதி செய்ய 2002 ஆம் ஆண்டில் 25 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர தகவல் பறிமாற்றுச் சட்டத்தின் கீழ் இந்தியாவிடம் உதவியைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version