டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அதே தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், அந்த சம்பவத்தை படம் பிடித்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபர், அதை படம்பிடித்ததாகக் கூறப்படும் நபர் ஆகிய மூவருமே கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சுமார் 10,000 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த பாலியல் தாக்குதல் சம்பவம் ஜூலை 15ஆம் தேதி நடந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகும்வரை தனிமைப்படுத்தல் மையத்திலேயே இருப்பார்கள்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி பர்விந்தர் சிங் என்பவர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி சிறுமி மீதான பாலியல் தாக்குதல் அந்த மையத்தின் கழிவறை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்த பின்னர் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய கொரோனா வைரஸ் தடுப்பு மையம் என்று இந்திய அரசு கூறும் இந்த மையத்தில் கொரோனா அறிகுறிகள் இல்லாத நபர்கள் மற்றும் மிதமான அளவு தொற்று ஏற்பட்டுள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சுமார் 12 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதன் காரணமாக மத்திய மற்றும் பல்வேறு மாநிலங்களின் அரசுகள் பல தற்காலிக தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்தி வருகின்றன.
கொரோனா வைரஸ்

ஆனால் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் பாலியல் தாக்குதல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது முதல் முறையல்ல.

மும்பையில் உள்ள கொரானா வைரஸ் நோயாளிகளுக்கான தடுப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்த 40 வயது பெண் ஒருவர் மீது 25 வயது இளைஞர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல பிகார் தலைநகர் பட்னாவில் தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version