யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலைக்கவசம் இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிளில் இடைக்குறிச்சி வரணியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் சைனிஸ் (வயது 26), யோகேந்திரன் கோகுலன் (வயது 26) ஆகிய இருவரும் பயணித்திருக்கின்றனர்.

அவர்களைக் கண்ணுற்ற பொலிஸார் நிறுத்துவதற்கு முற்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் வேமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியிருக்கின்றனர்.

கொடிகாமம் – பருத்தித்துறை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றமையால் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது அவர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த இருவரும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் பிரான்ஸிஸ் சைனிஸ் என்பவரின் நிலை மோசமாக இருப்பதால் அவரைத் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்த முடியாது என்று தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பருத்தித்துறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version