உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களை அறிவிப்பதற்கு, தான் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்க முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய நாளிலும், தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவும், அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவிக்க முடியாது போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த தினத்தில் வெளிநாட்டு சுற்றுலாவில் ஈடுபடுட்டிருந்த நிலையில், தொலைபேசியூடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகிய போதே, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாக்குல் இடம்பெறுவதற்கு முன்னர், இறுதியாக 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே பாதுகாப்புப் பேரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தையநாளில் கிடைக்கப் பெற்ற வெளிநாட்டு புலனாய்வு தகவல் குறித்து, ஜனாதிபதிக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை என அரச மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் வினவிய போதே, நிலந்த ஜயவர்தன இவ்வாறு கூறியுள்ளார். எனினும், ஏப்ரல் 20 ஆம் திகதி, இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்க முயற்சித்த போதிலும், அவரது தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version