13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என அரசாங்க தரப்பின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் 13 ஆவது திருத்தம் குறித்து அரசாங்கத்தினால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களுடன் மாகாணசபை முறையை இரத்து செய்வதன் மூலம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமும் திருத்தப்படும் என்ற ஊகங்கள் கடந்த நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகின்றன.

இந்நிலையில் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 13 ஆவது திருத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இதேவேளை நீண்ட காலம் தாமதமாகியுள்ள மாகாணசபை தேர்தல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை விவாதிக்கவில்லை என்றும் தேர்தலை நடத்துவதற்கு முன்பு சில சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பெப்ரவரியில், பொதுத் தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது, ​​ஒன்பது மாகாணசபைகள் அனைத்தும் அவற்றின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளமை காரணமாக செயற்படாமல் உள்ளது. குறிப்பாக தென்மாகாண சபையின் பதவிக் காலம் ஏப்ரல் 10 ஆம் திகதியும், மேல் மாகாணசபையின் பதவிக் காலம் ஏப்ரல் 21 ம் திகதியும் முடிவடைந்தது.

சப்ரகமுவ மாகாணசபையின் பதவிக் காலம் 2017 செப்டம்பர் 26 அன்றும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் 2017 செப்டம்பர் 30 அன்றும் வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் 2017 ஒக்டோபர் முதலாம் திகதியும் முடிவடைந்தது

அதே நேரத்தில் மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் இல் முடிவடைந்த அதேநேரம் உவா மாகாண சபையின் பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version