நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் வடக்கு மக்கள் அதிகாரத்தை ஒரு கட்சிக்கு மாத்திரம் வழங்காமல் பிரித்து வழங்கியிருப்பதை காணமுடிகின்றது எனவும் இதனால் வடக்கில் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழ் மக்களின் இந்த மாற்றத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை வடக்குக்கும் கொண்டு செல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், வடக்கில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமாகும் எனவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக தங்களுக்க மாத்திரம்தான் கதைக்க முடியும் என்றும் கடந்த காலங்களில் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்து வந்தபோதும் இனிமேல் அவ்வாறு கூறமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை, தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் அதிகாரத்தை வழங்காமல் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பில் பிள்ளையான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.

இந்த சூழலில் தமிழ் மக்களின் இந்த மாற்றத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை வடக்குக்கும் கொண்டு செல்வோம் என்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தெற்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனது கல்வி அமைச்சின் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு பிரதேசத்துக்கும் கொண்டுசெல்ல உள்ளதாகவும் வடக்கும் தமது நாட்டின் ஒரு தொகுதி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அனைவருடனும் இணைந்து செயற்படவே தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version