இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றிய முதல் சில பெண்மணிகளில் ஒருவராக டாக்டர் ரக்மாபாய் ரெளட் இருப்பார். ஆனால் இந்தியாவின் ஆரம்பகால பெண்ணியவாதியாக அவர் இருந்தார் என்பதுதான் அதைவிட முக்கியமானதாக இருக்கும். தன்னுடைய 22வது வயதில் தனக்கு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியவர் அவர்.
அந்த காலகட்டத்தில், தாங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களைக் கைவிடுதல் அல்லது விவாகரத்து கோருதல் என்பது ஆண்களுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தது.
ஆனால் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்ட முதலாவது பெண்ணாக ரக்மாபாய்தான் இருந்திருப்பார்.
இந்திய சமுதாயத்தில் அடிப்படைவாத சிந்தனையை அசைத்துப் பார்த்த விவாகரத்து வழக்கு அது.
ரெளட் 1864ஆம் ஆண்டில் மும்பையில் (அப்போதைய பம்பாய்) பிறந்தவர். கைம்பெண்ணான அவருடைய தாய், ரக்மாவுக்கு 11 வயதாக இருந்த போதே திருமணம் செய்து வைத்துவிட்டார். ஆனால், அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ ஒருபோதும் விரும்பியதில்லை. தன் தாயுடனேயே அவர் வாழ்ந்து வந்தார்.
1887ஆம் ஆண்டில் அவருடைய கணவர் தாதாஜி பிக்காஜி, திருமண பந்தத்துக்கான உறவை அவர் செயல்படுத்த வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இதற்குப் பதில் அளித்த ரெளட், சிறு வயதாக இருந்தபோது, இந்தத் திருமணத்துக்கு தாம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், திருமண பந்தத்தில் ஈடுபடும்படி தன்னை நிர்பந்திக்க முடியாது என்று கூறினார்.
கடைசியாக, திருமணம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த வழக்கு அப்போது மிகவும் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும் இந்தப் பெண்ணுக்கு எதிராக தமது பத்திரிகையில் எழுதினார். “இந்து மரபுகளின் மீது விழுந்த கறை” என்று அந்தப் பெண் பற்றி திலகர் குறிப்பிட்டுள்ளார்.
ரக்மாபாய் போன்ற பெண்களை “திருடர்கள், திருமண உறவுக்கு வெளியே உறவு கொள்பவர்கள், கொலைகாரர்களைப்,” போல நடத்த வேண்டும் என்றும்கூட அவர் எழுதினார். இருந்தாலும் ரக்மாபாய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
இது பற்றி விரிவாக தகவல் இடம் பெற்ற செய்தி: பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா திலகர்?
தனது தாயின் இரண்டாவது கணவர் சகாராம் அர்ஜுன் ஆதரவுடன், தனது விவாகரத்துக்காக அவர் தொடர்ந்து போராடினார்.
அவருடைய கணவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், ரக்மாபாய் அமைதியாக இருந்துவிடவில்லை. தனது திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ராணி விக்டோரியாவுக்கு அவர் கடிதம் எழுதினார்.
நீதிமன்றத்தின் உத்தரவை ராணி ரத்து செய்தார். இறுதியாக அவருடைய கணவர் தன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு, பணம் வழங்குவதன் மூலம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டார்.
தடம் பதித்த அந்த வழக்கிற்குப் பிறகு என்ன நடந்தது?
இந்தியாவில் ‘மண ஒப்புதல் சட்டம் 1891’ நிறைவேற்றப்பட்டதில் ரக்மாபாய் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது. பெண்களுக்கான திருமண வயதை, சரியாகச் சொன்னால் உடல் உறவுக்கு ஏற்ற வயதை, 10 என்பதில் இருந்து 12 ஆக உயர்த்தி சட்டம் உருவாக்கப்பட்டது. இது புரட்சிகரமான மாற்றமாக இன்றைய காலக்கட்டத்தில் தோன்றாது.
திருணம் ரத்து செய்யப்பட்ட பிறகு, ரக்மாபாய் 1889ல் லண்டன் மகளிர் மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்காகப் பதிவு செய்தார். 1894ல் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். எம்.டி. படிக்க அவர் விரும்பினார்.
அந்த காலக்கட்டத்தில் பெண்கள் எம்.டி. படிக்க லண்டன் மருத்துவக் கல்லூரியில் அனுமதி கிடையாது. கல்லூரியின் முடிவுக்கு எதிராக அவர் குரல் எழுப்பினார். பின்னர் பிரஸல்ஸில் எம்.டி. படிப்பை முடித்தார்.
இந்தியாவில் எம்.டி. பட்டம் பெற்ற முதலாவது பெண்ணாக ரக்மாபாய் இருந்தார். இருந்தபோதிலும், கணவரை விட்டுப் பிரிவதற்கு முடிவு எடுத்தவர் என்பதால் மக்கள் அவரை தாழ்வாகப் பார்த்தனர்.
ஆரம்பத்தில் ரக்மாபாய் மும்பையில் காமா மருத்துவமனையில் பணியாற்றி, பிறகு சூரத் நகருக்குச் சென்றார். பெண்களின் ஆரோக்கியம் குறித்த விஷயங்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவர், 35 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார். அவர் தன் முதல் மணமுறிவுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.