கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார் என அவரது மகன் சரண் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று மாலையில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “என் தந்தைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பலனளிப்பதாகவும், அவர் 90 சதவீத மயக்கநிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் தரும் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கிறது. அவர் விரைவில் மீண்டு வருவார் என பிரார்த்திப்போம்” என கூறியுள்ளார்.

மேலும், தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த சரண், தனது தந்தைக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

பின்னர் வென்டிலேட்டருடன் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை கூறியது.

கோவிட் – 19 பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். அவருக்கு வயது 74.

Share.
Leave A Reply

Exit mobile version